அண்ணா பல்கலைக்கழக எம்.ஐ.டி. வளாகத்தில் ரூ.546¾ கோடியில் கட்டப்பட்ட திறன்மிகு மையம்


அண்ணா பல்கலைக்கழக எம்.ஐ.டி. வளாகத்தில் ரூ.546¾ கோடியில் கட்டப்பட்ட திறன்மிகு மையம்
x
தினத்தந்தி 11 Oct 2018 9:30 PM GMT (Updated: 11 Oct 2018 9:09 PM GMT)

குரோம்பேட்டை அண்ணா பல்கலைக்கழக எம்.ஐ.டி. வளாகத்தில் திறன்மிகு மையத்தை காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச்செயலகத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தால் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் நெல் கொள்முதல் பணிகளை முழுமையாக கணினிமயமாக்கும் வகையில் ரூ.7 கோடியே 6 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பீட்டிலான மின்னணு கொள்முதல் திட்ட மென்பொருள் செயல்முறையை தொடங்கிவைத்தார்.

இதன்மூலம் ஒரு நேரடி நெல்கொள்முதல் நிலையத்திற்கு ‘ஒரு பாயிண்ட் ஆப் சேல்’ எந்திரம் வீதம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கும் மொத்தமாக 2,100 டேப், பிரிண்டர்களும் அதற்கு தேவையான மென்பொருள்களும் உருவாக்கப்பட்டு அதை நிறுவுவதற்கு தேவையான சாதனங்களும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான தொகை உடனடியாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு முழுமையான மின்னணு கொள்முதல் முறை நடைமுறைப்படுத்தப்படும்.

இதனைத்தொடர்ந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் காஞ்சீபுரம் மாவட்டம் பொலம்பாக்கம், தையூர் மற்றும் மீனம்பாக்கம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, அனகாபுத்தூர் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி உள்பட மாநிலம் முழுவதும் பல மாவட்டங்களில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை, விடுதிகள் மற்றும் அறிவியல் ஆய்வுக்கூடங்ககளை எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் 546 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் காஞ்சீபுரம் மாவட்டம், குரோம்பேட்டையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக எம்.ஐ.டி. வளாகத்தில், பொறியியல் மற்றும் பல்தொழில்நுட்ப கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உலக தரத்திலான உயர் தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள திறன்மிகு மையத்தை காணொலிக்காட்சி மூலமாக எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

மேலும், காஞ்சீபுரம் மற்றும் விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரிகள், வேலூர் தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப கல்லூரி, தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஆவடி முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப திறன் வளர்ச்சி மையங்களும் திறந்து வைக்கப்பட்டது.

இந்த தொழில்நுட்ப திறன் வளர்ச்சி மையங்களில் படிக்கும் மாணவ, மாணவிகளோடு, மற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் உயர்மட்ட திறன் பயிற்சிகள் வழங்கப்படும். ஜெர்மனி நாட்டை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான சீமென்ஸ் நிறுவனத்தால் நேரடியாக உலகத்தரத்திலான பயிற்சி கருவிகளும், எந்திரங்களும், தளவாடங்களும் இந்த மையங்களில் நிறுவப்பட்டுள்ளன. சீமென்ஸ் நிறுவனத்துடன் இணைந்து டிசைன்டெக் நிறுவனம் நேரடியாக மாணவ-மாணவிகளுக்கு பயிற்சிகளை வழங்க உள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story