தமிழ்வழி பயின்றவர்களுக்கு பெரும் அநீதி ஏற்படுத்தப்பட்டுள்ளது டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு


தமிழ்வழி பயின்றவர்களுக்கு பெரும் அநீதி ஏற்படுத்தப்பட்டுள்ளது டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 12 Oct 2018 8:31 PM GMT (Updated: 12 Oct 2018 8:31 PM GMT)

காவல்துறை தொழில்நுட்ப உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வில் தமிழ் வழி பயின்றவர்களுக்கு பெரும் அநீதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

சென்னை,

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மாணவர்களுக்கு அநீதி

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியத்தால், 12 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்ட காவல்துறையின் தொழில்நுட்ப உதவி ஆய்வாளருக்கான தேர்வில், 55 ஆயிரம் பேர் பங்கெடுத்து தேர்வு எழுதியுள்ளனர்.

இதில், பொது அறிவுப்பிரிவில் 60 கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் மட்டுமே கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. இது தமிழ் வழி பயின்றவர்களுக்கு, பெரும் அநீதியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த முறை தேர்வு நடந்தபோது, தமிழிலும், ஆங்கிலத்திலும் கேள்விகள் கேட்கப்பட்ட நடைமுறைக்கு மாறாக, ஆங்கிலத்தில் மட்டுமே 60 கேள்விகள் இந்தமுறை கேட்கப்பட்டது. இது தொடர்பாக, தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்தவேண்டுமென்று கோரிக்கை பலரால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதைப்போன்றே, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் தமிழில் தேர்வெழுத அனுமதி கோரி போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது சிறிதும் இரக்கமின்றி காவல்துறையை வைத்து தடியடி தாக்குதலை நடத்தியதோடு, அவர்கள் மீது பொய் வழக்கையும் புனைந்துள்ளனர்.

கண்டனம்

நீட் தேர்வு முறையில், தமிழ் வழி பாடம் படித்தவர்களுக்கு, பெரும் பாதகத்தை மத்திய அரசு செய்ததென்று, ஒட்டுமொத்த தமிழகமுமே குற்றம்சாட்டி வரும் நிலையில், மாநில அரசே இதைப்போன்ற கொடுமையை செய்வது பலருடைய வாழ்க்கையை கேள்விக்குரியாக்கி உள்ளது.

தமிழ்நாடு என்று பெயரிடப்பட்டதின் பொன்விழா ஆண்டு கொண்டாடுகிறோம் என்று போலித்தனமாக கொண்டாடும், இந்த எடப்பாடி பழனிசாமி அரசின் தமிழ்பற்று என்ன என்பதும் இப்பிரச்சினைகளில் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. தொடர்ந்து மாணவ விரோத போக்கை கையாண்டுவரும் எடப்பாடி பழனிசாமியின் அரசிற்கும், மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய காவல்துறைக்கும் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story