23-வது ஆண்டு நினைவு தினம்: ம.பொ.சி.யின் சுயசரிதை புத்தகம் வெங்கையாநாயுடு வெளியிட்டார்


23-வது ஆண்டு நினைவு தினம்: ம.பொ.சி.யின் சுயசரிதை புத்தகம் வெங்கையாநாயுடு வெளியிட்டார்
x
தினத்தந்தி 12 Oct 2018 10:43 PM GMT (Updated: 12 Oct 2018 10:43 PM GMT)

ம.பொ.சி.யின் 23-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது சுயசரிதை புத்தகத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டார்.

சென்னை,

‘சிலம்பு செல்வர்’ என்று அழைக்கப்படும் ம.பொ.சி.யின் 23-வது ஆண்டு நினைவுநாள் மற்றும் ‘எனது போராட்டம் என்ற தலைப்பில் ம.பொ.சி.யின் சுயசரிதை’ புத்தக வெளியீட்டு விழா சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன், வி.ஜி.பி. குழும தலைவர் வி.ஜி.சந்தோசம், வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

வெங்கையா நாயுடு பேச்சு

‘ம.பொ.சி.யின் சுயசரிதை’ புத்தகத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டு பேசியதாவது:-

ஒரு சுதந்திரப் போராட்ட வீரராக, தமிழ் இலக்கியத்தை நன்கு கற்றறிந்த அறிஞரும், தமிழ்நாட்டிற்கும், தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாசாரத்திற்கு புதிய அடையாளத்தை உருவாக்கியவருமான ம.பொ.சி. நாட்டிற்காக ஆற்றிய அரும்பணிகளை நினைவு கூர்வது அவசியம்.

தமிழக சுதந்திரப் போராட்டக்களத்தில் ராஜாஜி அர்ஜூனன் என்றால், ம.பொ.சி. கிருஷ்ணரைப் போன்றவர். உண்மையான தேசியவாதியாக திகழ்ந்ததுடன் இந்தியாவின் நற்பண்புகளைப் பிரதிபலித்தவர்.

கலைக்களஞ்சியம்

‘தமிழ்நாடு’ என்ற மாநிலம் உருவாக தந்தையாகப் பாடுபட்டவர் ம.பொ.சி. என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும். ம.பொ.சி. எழுதிய ‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்ற நூல், தமிழ்நாட்டில் தேசிய உணர்வை ஊட்டுவதாக அமைந்தது.

20-ம் நூற்றாண்டின் முதல்பகுதியில் நிகழ்ந்த சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்களிப்பை இந்த நூல் மிகத்தெளிவாக எடுத்துரைக்கிறது. தற்கால தமிழகத்தில் உள்ள தேசியவாதிகளுக்கு இந்த நூல் ஒரு கலைக்களஞ்சியமாக திகழ்கிறது.

மத்திய, மாநில அரசு நடவடிக்கை

தமிழ்மொழியையும், கலாசாரத்தையும் மிகவும் நேசித்த அவர் எழுப்பிய, ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்ற சொல் தமிழர்கள் ஒவ்வொருவரின் இல்லத்திலும் எதிரொலித்தது. இதையே அனைத்து அரசியல் கட்சிகளும் முழங்கி வருகின்றன.

ம.பொ.சி. போன்ற தலை சிறந்த தலைவர்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்கும் என்று நான் நம்புகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக ம.பொ.சி.யின் பேரன் டாக்டர் பா.செந்தில் வரவேற்பு உரையாற்றினார். முடிவில் ம.பொ.சி.யின் மகள் மாதவி பாஸ்கரன் நன்றி கூறினார்.

குமரிஅனந்தன்

விழாவில் ஓய்வு பெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன், வி.ஜி.பி.ராஜாதாஸ், பெருந்தலைவர் மக்கள் கட்சி துணை தலைவர் கல்பாக்கம் மோகன், செய்தித்தொடர்பாளர் சந்தானம், சென்னை நாடார் சங்க செயலாளர் டி.விஜயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story