கவர்னரை நிர்மலா தேவி சந்தித்தது இல்லை கவர்னர் மாளிகை விளக்கம்


கவர்னரை நிர்மலா தேவி சந்தித்தது இல்லை கவர்னர் மாளிகை விளக்கம்
x
தினத்தந்தி 13 Oct 2018 12:15 AM GMT (Updated: 12 Oct 2018 11:24 PM GMT)

அச்சுறுத்துவதை சகிக்க முடியாது என்று கூறியுள்ள கவர்னர் மாளிகை, கவர்னரை நிர்மலா தேவி சந்தித்தது இல்லை என்றும் விளக்கம் அளித்து உள்ளது.

சென்னை, 

நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக கவர்னரை தொடர்புபடுத்தி ‘நக்கீரன்’ இதழில் சமீபத்தில் கட்டுரை வெளியானது.

இதுதொடர்பாக கவர்னர் மாளிகை அளித்த புகாரின் பேரில், நக்கீரன் இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால் கடந்த செவ்வாய்க்கிழமை சிந்தாதிரிப்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் கோர்ட்டு அன்றைய தினமே அந்த வழக்குகளை ரத்து செய்து நக்கீரன் கோபாலை விடுதலை செய்தது. பெரும் புயலை கிளப்பிய இந்த விவகாரம் குறித்து கவர்னர் மாளிகை நேற்று விளக்கம் அளித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மிகுந்த மன கலக்கத்தோடும், கவலையோடும் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த பத்திரிகை குறிப்பு வெளியிடப்படுகிறது. இந்தியா மகத்தான கலாசாரத்தை கொண்ட நாடு. குறிப்பாக தமிழகம் திருவள்ளுவர் காலத்தில் இருந்து சர்வப்பள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் காலம் வரை பல நூற்றாண்டுகளாக மிகப்பெரிய தத்துவ தலைமையின்கீழ், இருந்த சரித்திர புகழ் வாய்ந்ததாகும். எனவே சந்தேகத்துக்கு இடம் இல்லாமல் தமிழக மக்கள் நியாயம், உண்மை மற்றும் நல்லவற்றின் பக்கம்தான் நிற்பார்கள்.

சமூக விரோத சக்திகள் இப்போது சமுதாயத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்ளும் அச்சுறுத்தல் ஏற்படும்போதுதான் உண்மையை தெரிவிக்க கவர்னர் மாளிகைக்கு இந்த தேவை ஏற்பட்டது. பழைய காலத்தில், அதாவது ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் இருந்தே காந்தியடிகள் காலம் வரை மக்களுக்கு அச்சத்தை தவிர்த்து உண்மை, நேர்மையின் பக்கம் நிற்க கற்றுக்கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலா தேவி கவர்னரோடும், கவர்னர் மாளிகையோடும் உள்ள தொடர்புபற்றி வெளிவந்த செய்திகளில் துளி அளவுகூட உண்மை இல்லை. இது முற்றிலும் பொய்யானது ஆகும். போலீசில் அவர் கொடுத்த வாக்குமூலமே உண்மையை தெளிவாக கூறுகிறது.

மாநிலத்தின் முதல் குடி மகனை அவதூறாகவும், கீழ்த்தரமாகவும், கோழைத்தனமாகவும் தாக்குவதை நிறுத்துவதற்காக மிகவும் பொறுமையோடு சகிப்புதன்மையை தாங்கிக்கொண்ட பிறகுதான் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது இப்படி இருக்க, பத்திரிகை சுதந்திரம் அச்சுறுத்தப்படுகிறது என்று சிலர் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. எல்லா விஷயங்களுக்கும் ஒரு வரைமுறை இருக்கிறது.

புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு 6 மாதங்களாக சட்டம் தனது நடவடிக்கையை தொடங்கிய நிலையில் இந்த விஷயம் குறித்து கவர்னர் மாளிகை மிகவும் கண்ணியத்துடன் அமைதி காத்தது. குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட பிறகு எல்லா புலன் விசாரணையும் முடிந்தபிறகு செப்டம்பர் மாதத்தில் நக்கீரன் இதழில் மஞ்சள் பத்திரிகையில் வருவது போன்று செய்திகள் வெளியானது அதிர்ச்சியாக இருந்தது. புலனாய்வு பத்திரிகை என்று கூறிக்கொள்பவர்கள் போலீசில் நிர்மலா தேவி கூறிய உண்மையான வாக்குமூலத்தை பற்றி கவலைப்படவில்லை. பத்திரிகை நெறிமுறைகளில் ஒழுங்கை பின்பற்றாத ஒரு கோழைத்தனம் உச்சத்துக்கு செல்லும் அளவுக்கு ஒரு கட்டுரை வெளியிடப்பட்டு இருந்தது.

உண்மையிலேயே நிர்மலா தேவி கடந்த ஓராண்டாக கவர்னர் மாளிகைக்குள் நுழைந்ததே இல்லை. அவருக்கு கவர்னருடனோ, கவர்னரின் செயலாளருடனோ அல்லது கவர்னர் மாளிகையில் பணியாற்றும் அதிகாரிகளுடனோ எந்த வித அறிமுகமும் கிடையாது.

மதுரை காமராஜர் பல் கலைக்கழகத்தில் நடந்த அன்னை தெரசா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு கவர்னரை அழைத்த நேரத்தில், அவர் ஒருபோதும் பல் கலைக்கழக விருந்தினர் மாளிகைக்கு செல்லவில்லை.

எந்த ஒரு சூழ்நிலையிலும் கவர்னர் அங்கு தங்கவில்லை. மதுரை காமராஜர் பல்கலைக்கழக சுற்றுப்பயணத்தின்போது கவர்னரோடு, அவருடைய செயலாளர் செல்லவில்லை.

நற்பண்புகள் மற்றும் உண்மையின் மீது கொண்ட வெறுப்பு தான், எந்த ஒரு பத்திரிகையாளரையும் நக்கீரன் இதழில் வெளிவந்தது போல எழுத வைத்துவிடும். இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், மஞ்சள் பத்திரிகைகள் போன்று எழுதப்பட்ட இப்படிப்பட்ட பொய்யான தகவல்களை கூட உண்மை தெரியாமல் சில மதிப்புமிக்க மக்கள் கூட ஆதரிப்பது தான்.

சுதந்திர போராட்ட வீரர்களான சுப்பிரமணிய பாரதி, வ.உ.சி., அண்ணா, காமராஜர் போன்ற தலைவர்கள், டாக்டர் எம்.ஜி.ஆர்., அப்துல்கலாம் போன்ற பாரத ரத்னாக்கள் தங்களின் உயர்ந்த எண்ணம், செயல்கள், பேச்சுகள், எழுத்துகள் மூலம் இந்த மாநிலத்தை பெருமை மிக்கதாக ஆக்கியிருக்கிறார்கள்.

கவர்னர் மாளிகை எப்போதுமே வரம்புமீறி மாநில அதிகாரத்தில் அத்துமீறுபவர்களை ஒருபோதும் ஆதரித்தது கிடையாது. தொடர்ந்து அடிப்படையற்ற அபாண்டமான செய்திகளால் காயம்பட்ட நிலையில் சட்டத்தின் அடிப்படையிலேயே புகார் கொடுக்கப்பட்டது.

ஜனநாயகத்தில் ஆரோக்கியமான கருத்து பரிமாற்றங்கள் இருக்கலாம். ஆனால் கவர்னர் போன்ற அரசியல் சட்ட பதவியில் உள்ளவர்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ அச்சுறுத்துவதை சகித்துக்கொள்ளவே முடியாது. இந்த உயர்ந்த பதவியின் கண்ணியத்துக்கு பங்கம் ஏற்படும் வகையில் சேற்றை வாரி வீசும் எந்த நடவடிக்கைகளுக்கும் கவர்னர் மாளிகை ஒருபோதும் அடிபணியாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story