ஆளும் கட்சியை சேர்ந்தவர்களே அரசு வக்கீலாக நியமிக்கப்படுகின்றனர் அமைச்சர் முன்னிலையில் நீதிபதி குற்றச்சாட்டு


ஆளும் கட்சியை சேர்ந்தவர்களே அரசு வக்கீலாக நியமிக்கப்படுகின்றனர் அமைச்சர் முன்னிலையில் நீதிபதி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 13 Oct 2018 9:30 PM GMT (Updated: 13 Oct 2018 7:53 PM GMT)

மாவட்ட செசன்சு கோர்ட்டுகளில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களே அரசு வக்கீலாக நியமிக்கப்படுவதாக அமைச்சர் முன்னிலையில் ஐகோர்ட்டு நீதிபதி குற்றம்சாட்டினார்.

சென்னை,

தமிழ்நாடு மாநில ஜூடிசியல் அகாடமியும், தமிழக குற்ற வழக்கு தொடர்வுத்துறையும் இணைந்து அரசு வக்கீல்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்துகின்றன. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை, 7 கட்டங்களாக மதுரையில் நடைபெற உள்ள இந்த பயிற்சி வகுப்புகளின் தொடக்க விழா, சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடந்தது.

இந்த விழாவில் ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், டி.எஸ்.சிவஞானம், ஆர்.சுப்பிரமணியன், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்தனர்.

நீதிபதி குற்றச்சாட்டு

விழாவில் நீதிபதி டி.எஸ்.சிவஞானம் கூறியதாவது:-

பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால், சென்னையில் சங்கிலி பறிப்பு குறைந்து வருவதாக கூறுகிறார்கள். ஆனால் ஐகோர்ட்டில், தினமும் குறைந்தது 250 பேர் முன்ஜாமீன் கேட்டு மனு செய்கின்றனர். அரசு வக்கீல்கள் தகவல் தொழில்நுட்ப சட்டம், சட்டவிரோத பண பரிவர்த்தனைச் சட்டம் உள்ளிட்ட புதிய சட்டங்கள் குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

மாவட்ட செசன்சு கோர்ட்டுகளில், ஆளும் கட்சியை சேர்ந்தவர்களே அரசு வக்கீல்களாக நியமிக்கப்படுகின்றனர். அந்த பதவிகளுக்கு, பதவி உயர்வு அடிப்படையில், மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகளில் பணியாற்றுபவர்களை நியமிக்க சட்டத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வாறு அவர் பேசினார்.

பொதுமக்கள் பயப்படக்கூடாது

நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் கூறுகையில், ‘அரசு குற்றவியல் வக்கீல்கள் என்பவர்கள், காவல்துறையின் வக்கீல்கள் இல்லை. கோர்ட்டில் இருந்து சம்மன், நோட்டீஸ் வந்தால், அவற்றை வாங்க பயப்படுபவர்கள் பலர் உள்ளனர். நீதிமன்றத்தை கண்டு பொதுமக்கள் பயப்படக்கூடாது.

2018-ம் ஆண்டு செப்டம்பர் வரை 44 சதவீத வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்துள்ளதாக அமைச்சர் கூறினார். இந்த சதவீதத்தை 50 சதவீதமாக உயர்த்த அரசு வக்கீல்கள் பணியாற்ற வேண்டும்’ என்றார்.

அமைச்சர் சொல்வது என்ன?

அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது:-

ஐகோர்ட்டு கேட்கும் அனைத்து உதவிகளையும் தமிழக அரசு உடனுக்குடன் செய்து வருகிறது. இந்த பயிற்சி வகுப்புக்காக அரசு சுமார் ரூ.7 கோடியை ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் 88 சதவீத நீதிமன்றங்கள் சொந்த கட்டிடத்தில் செயல்படுகிறது. விரைவில் அனைத்து நீதிமன்றங்களும், சொந்த கட்டிடத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது தமிழகத்தில் உள்ள 725 மாஜிஸ்திரேட்டுகளில், 322 மாஜிஸ்திரேட்டுகள் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்டவர்கள். மேலும் 320 புதிய மாஜிஸ்திரேட்டுகள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்

இவ்வாறு அவர் கூறினார்.

கால அட்டவணை

பயிற்சியில் பங்கேற்கும் அரசு வக்கீல்களுக்கு ஐகோர்ட்டு தீர்ப்புகளையும், சட்டங்களையும் உடனுக்குடன் படிக்கும் வகையில் ‘ஐ-பேட்’ உள்ளிட்ட சாதனங்கள் வழங்கப்பட்டன.

அதேபோல இந்த பயிற்சி வகுப்புகள் குறித்த கால அட்டவணையையும் நீதிபதிகள் வெளியிட்டனர்.

Next Story