மாநில செய்திகள்

ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் இன்னும் விலகவில்லைஐகோர்ட்டு நீதிபதி கருத்து + "||" + The mystery of Jayalalithaa's death High Court Judge Comment

ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் இன்னும் விலகவில்லைஐகோர்ட்டு நீதிபதி கருத்து

ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் இன்னும் விலகவில்லைஐகோர்ட்டு நீதிபதி கருத்து
ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் இன்னும் விலகவில்லை என்று ஐகோர்ட்டு நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை,

பெங்களூருவை சேர்ந்த அம்ருதா என்பவர் ஜெயலலிதாவின் மகள் என்று உரிமை கோரி ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் மனுவை தள்ளுபடி செய்தார். அவர் பிறப்பித்துள்ள தீர்ப்பில் கூறியுள்ள விவரங்கள் வருமாறு:-

மரபணு சோதனை செய்வதற்கு ஜெயலலிதா சிகிச்சை பெறும்போது அவரது ரத்த மாதிரி எடுத்து பாதுகாக்கப்பட்டதா? என்று அப்பல்லோ ஆஸ்பத்திரியிடம் கேட்டபோது, இல்லை என்று பதில் வந்தது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் ரத்த மாதிரியை கொண்டு மரபணு சோதனை நடத்த உத்தரவிட வேண்டுமென்றால், ஜெயலலிதாவின் மகள் என்பதற்கான ஆரம்பகட்ட ஆதாரங்கள் எதுவும் அம்ருதாவிடம் இல்லை.

சிவபெருமானின் திருவிளையாடல் புராணத்தில், வெள்ளிநிலவு என்ற பெண்ணுக்கு திருமணம் நடந்ததற்கு வன்னிமரம், கிணறு சாட்சி சொன்னது. சிவபெருமானும் சாட்சி சொன்னார். ஆனால் இது கலியுகம். ஜெயலலிதாவின் மகள் அம்ருதா என்று சாட்சி சொல்ல இறந்தவர்கள் யாரும் (அம்ருதாவின் வளர்ப்பு பெற்றோர் சைலஜா-சாரதி) வரமாட்டார்கள். இந்த வழக்கில் சினிமா படத்தில் வருவதுபோல, ஏராளமான திருப்பங்கள், எதிர்பார்ப்புகள், கவலைகள் என்று பல வந்து சென்றாலும், அவற்றையெல்லாம் ஆதாரங்களாக எடுத்துக் கொள்ள முடியாது.

இது ஒரு பக்கம் இருக்க, மிகப்பெரிய வேதனை என்னவென்றால், ஜெயலலிதாவின் மரணம் இன்றுவரை மர்மமாகத்தான் உள்ளது. இட்லி சாப்பிட்டார், உடற்பயிற்சி செய்தார், நகைச்சுவையாக பேசினார், அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் என்று வில்லனைபோல பொய்யான கதையை அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் சொன்னது.

இதுமட்டுமல்ல, ஜெயலலிதாவின் தாயார் சந்தியா 1971-ம் ஆண்டு எழுதிய உயிலில் ஜெயக்குமார், ஜெயலலிதா ஆகியோர் மட்டுமே தன்னுடைய வாரிசு என்று கூறியுள்ளார். அம்ருதாவின் வளர்ப்பு தாய் என்று கூறப்படும் சைலஜாவின் பெயர் அதில் இல்லை.

சைலஜா தன்னை ஜெயலலிதாவின் தங்கை என்று ஊடகங்களில் பேட்டி கொடுத்தபோது, அவர் மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்து, பின்னர் அது தள்ளுபடியும் செய்யப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசு இல்லை. 2-ம் நிலை வாரிசுகள் தீபா, தீபக் மட்டுமே உள்ளனர். இவர்கள் இருவரும் ஜெயலலிதாவின் உடலை வைஷ்ணவ அய்யங்கார் முறைப்படி அடக்கம் செய்ய ஆர்வம் காட்டவில்லை. இறுதிச்சடங்கு செய்த தீபக்கும் அதை வலியுறுத்தவில்லை.

ஜெயலலிதாவின் நற்பெயருக்கு அம்ருதா களங்கத்தை ஏற்படுத்துவதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. புராணங்களின்படி, இறந்தவர்களுக்கும் அந்தரங்க உரிமை உள்ளது. அவர்களது ஆத்மாவை தொந்தரவு செய்யக்கூடாது. மரணத்துக்கு பின்னரும் அவர்கள் வாழ்கின்றனர் என்ற நம்பிக்கை உள்ளது.

ஜெயலலிதா தன் தாயார் என்பதற்கு எந்த ஒரு ஆதாரத்தையும் அம்ருதா தாக்கல் செய்யவில்லை. அதனால், ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து இறுதிச் சடங்கு செய்வதற்கு அம்ருதாவுக்கு அனுமதி வழங்கமுடியாது.

சோபன்பாபு தன் தந்தை என்று அம்ருதா கூறினாலும், அவரது வாரிசுகளின் ரத்த மாதிரியை கொண்டு மரபணு சோதனை செய்யவேண்டும் என்று அவர் கோரவில்லை. ஐகோர்ட்டு இதுகுறித்து கேள்வி எழுப்பிய பின்னர்தான் மரபணு சோதனைக்கு தயார் என்று அவர் தரப்பில் கூறப்பட்டது.

இறுதிச்சடங்கு குறித்து அம்ருதா தான் கோரிக்கை விடுக்கிறாரே தவிர, தீபாவும், தீபக்கும் இதுகுறித்து வாய் திறக்காமல் அமைதியாக இருக்கின்றனர். அவர்களுக்குள்ளும் ஒற்றுமை இல்லை என்று கூறப்படுகிறது. அதேநேரம், இவர்கள் இருவரும் ஜெயலலிதாவின் சொத்துகளை அபகரிக்கத்தான் முயற்சிக்கின்றனர். அதுவும், ஜெயலலிதா வகித்து வந்த அரசியல் பதவியை அபகரிக்கத்தான் தீபா முயற்சிக்கிறார்.

எனவே, இந்த தொடரின் இறுதிக்கட்ட காட்சி என்னவென்றால், ஜெயலலிதாவின் மகள் என்பதை அம்ருதா நிரூபிக்கவில்லை. எனவே, அவரது மனுவை தள்ளுபடி செய்கிறேன்.

இவ்வாறு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உத்தரவில் தெரிவித்துள்ளார்.