சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் 3 சிலைகள் மாற்றம்: அறநிலையத்துறை பெண் அதிகாரியிடம் விசாரணை


சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் 3 சிலைகள் மாற்றம்: அறநிலையத்துறை பெண் அதிகாரியிடம் விசாரணை
x
தினத்தந்தி 13 Oct 2018 9:38 PM GMT (Updated: 13 Oct 2018 9:38 PM GMT)

கபாலீஸ்வரர் கோவிலில் 3 சிலைகள் மாற்றப்பட்டது தொடர்பாக அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் வீட்டுக்கு சென்று, அவரிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

பெரம்பூர்,

சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு நடைபெற்ற திருப்பணியின்போது புன்னைவனநாதர் சன்னதியில் இருந்த மயில் வடிவ சிலை மற்றும் பழமையான ராகு, கேது சிலைகள் மாற்றப்பட்டப்பட்டன.

இதில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக வந்த புகாரின்பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் கடந்த ஆகஸ்டு மாதம் இந்த கோவிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கோவிலின் இணை ஆணையர் காவேரியிடமும், ஓய்வுபெற்ற கோவில் அர்ச்சகர்கள் 3 பேர் உள்பட 5 அர்ச்சகர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

கபாலீஸ்வரர் கோவிலில் ஆய்வு

இந்த நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், கடந்த 11-ந்தேதி மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சென்று 1 மணிநேரம் ஆய்வு செய்தனர்.

2-வது நாளாக நேற்று முன்தினம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக் நடராஜன் தலைமையில் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வந்த போலீசார், இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.

கோவில் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்ட ஸ்தபதி முத்தையாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

வீட்டுக்கு சென்று விசாரணை

இந்தநிலையில் நேற்று சென்னை பெரம்பூர் திருப்பூர் குமரன் தெருவில் உள்ள அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் வீட்டுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் தலைமையில் ஒரு பெண் உதவி ஆய்வாளர் உள்பட 5 பேர் கொண்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சென்றனர். அங்கு திருமகளிடம், 3 சிலைகள் மாற்றப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

சிலை கடத்தல் விவகாரத்தில் முதல் முறையாக சிலை கடத்தல் தடுப்பு போலீசார் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தி உள்ளனர். விசாரிக்கப்படுபவர் பெண் என்பதால் சட்டப்படி அவரது வீட்டுக்கு சென்று விசாரணை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் இது முதல்கட்ட விசாரணைதான் என்றும், இதில் பல முக்கிய நபர்களுக்கு தொடர்பு இருப்பதால் இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

Next Story