குருவித்துறை பெருமாள் கோவிலில் கொள்ளை போன ஐம்பொன் சிலைகள் மீட்பு, விசாரணை தீவிரம்


குருவித்துறை பெருமாள் கோவிலில் கொள்ளை போன ஐம்பொன் சிலைகள் மீட்பு, விசாரணை தீவிரம்
x
தினத்தந்தி 16 Oct 2018 2:15 PM GMT (Updated: 16 Oct 2018 2:15 PM GMT)

குருவித்துறை பெருமாள் கோவிலில் கொள்ளை போன ஐம்பொன் சிலைகள் நிலக்கோட்டை அருகே முட்புதரில் கிடந்தன. அவற்றை போலீசார் மீட்டனர்.



நிலக்கோட்டை, 


மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறையில் சித்திர ரத வல்லபபெருமாள் கோவில் மிகவும் பழமையானது ஆகும். வைகை ஆற்றின் கரையோரம் அமைந்திருக்கும் இந்த கோவிலில் குருபகவான் தவக்கோலத்தில் காட்சி தருவது சிறப்பு வாய்ந்தது. கடந்த 13&ந்தேதி கடைசி புரட்டாசி சனிக்கிழமையன்று பூஜைகளை முடித்துவிட்டு மாலை சுமார் 6 மணி அளவில் கோவிலை அர்ச்சகர்கள் பூட்டிவிட்டு சென்று விட்டனர். 

மறுநாள் ஊழியர் மணிகண்டன் வழக்கம்போல் கோவிலை சுற்றிப்பார்த்தபோது பக்கவாட்டு கதவு திறந்து கிடந்தது. இது குறித்து அவர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அவர்கள் கோவிலுக்கு விரைந்து வந்து உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் இருந்த பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாச பெருமாள் ஆகிய 4 ஐம்பொன் சிலைகள் கொள்ளைபோனது தெரியவந்தது. இதுகுறித்து காடுப்பட்டி போலீஸ் நிலையத்தில் செயல்அலுவலர் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். அங்கு வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து பார்த்தபோது 2 மர்ம நபர்கள் அதிகாலை 3 மணிக்கு கோவிலின் பக்கவாட்டு கதவை உடைத்து சிலைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இந்த நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவுக்குட்பட்ட கல்யாணிப்பட்டி பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் நிலக்கோட்டை அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது கல்யாணிப்பட்டி பிரிவில் சாலை ஓரத்தில் முட்புதரில் ஏதோ ஒரு பொருள் மின்னியது. உடனே கணேசன் அருகில் சென்று பார்த்தார். அப்போது அவை ஐம்பொன்னால் ஆன சாமி சிலைகள் என தெரியவந்தது. அவர் இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முட்புதரில் கிடந்த 4 ஐம்பொன் சிலைகளை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அவை குருவித்துறை சித்திர ரத வல்லபபெருமாள் கோவிலில் கொள்ளைபோன சிலைகள் என தெரியவந்தது.

பின்னர் அந்த சிலைகள் சோழவந்தான் போலீஸ் நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டன. போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல், தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். விலை மதிப்பு மிக்க ஐம்பொன் சிலைகளை கொள்ளையடித்து முட்புதரில் வீசிச்சென்ற கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

Next Story