‘நான் மக்களை நோக்கி செல்கிறேன்; அவர்கள் என்னை வரவேற்கிறார்கள்’ நடிகர் கமல்ஹாசன் பேட்டி


‘நான் மக்களை நோக்கி செல்கிறேன்; அவர்கள் என்னை வரவேற்கிறார்கள்’ நடிகர் கமல்ஹாசன் பேட்டி
x
தினத்தந்தி 16 Oct 2018 11:37 PM GMT (Updated: 16 Oct 2018 11:37 PM GMT)

நான் மக்களை நோக்கி செல்கிறேன். அவர்கள் என்னை வரவேற்கிறார்கள். அரசியல் கட்சியினரின் அங்கீகாரத்தை நான் விரும்பவில்லை என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

சென்னை,

சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் கமல்ஹாசன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு கமல்ஹாசன் அளித்த பதில்களும் வருமறு:-

கேள்வி:- கமல்ஹாசனின் கட்சி சப்பாணி குழந்தையை போன்றது. அது கருவிலேயே கலைக்கப்பட வேண்டும். கவுன்சிலர் தேர்தலில் கூட அவரது கட்சி வெற்றிபெற முடியாது என்ற கருத்துகளை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்து உள்ளாரே?

பதில்:- அது அவரது கருத்து. கரு கலைப்பு பற்றி பேசுவதை எல்லாம் பெண்கள் பார்த்துக் கொண்டு இருப்பார்கள். பெண்களுக்கு அது சுவைக்காது. எப்படி பாலில் கலப்படம் செய்தால் சுவைக்காதோ? அதே போன்று இந்த பேச்சும் சுவைக்காது.

கேள்வி:- வெளிநாட்டு தீய சக்தியுடன் இணைந்து செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் உங்கள் மீது இருப்பதாகவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்து உள்ளாரே?

பதில்:- அவரே தீய சக்தி தான். அவருக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கலாம்.

கேள்வி:- திராவிட கட்சிகள் உங்களை அங்கீகரிக்க மறுக்கிறார்கள். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- நான் மக்களை நோக்கி சென்று கொண்டு இருக்கிறேன். அரசியல் கட்சிகளை நோக்கி செல்வதாக இருந்தால், கட்சியே ஆரம்பித்து இருக்கமாட்டேன். மக்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதாக நம்புகிறேன். அரசியல் கட்சியினரின் அங்கீகாரத்தை நான் விரும்பவில்லை. பெரியவர்கள் இருந்த வரை, எனக்கு உரிய மரியாதைகள் வழங்கப்பட்டன. இன்று இருப்பவர்கள் அதை தர மறுத்தால், அது அவர்களின் பெருந்தன்மையின்மையை காட்டும்.

கேள்வி:- அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்றும், காங்கிரசுடனான கூட்டணியை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றும் கூறியிருந்தீர்கள். ஆனால் மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு ஊழலற்ற கட்சிகளுடன் தான் கூட்டு என்று இருக்கும் போது, கமல்ஹாசனின் நிலைப்பாடே இல்லையே?

பதில்:- ஊழலற்றவர்களுடன் தான் இருப்போம் என்பது எங்கள் நிலைப்பாடு. ஆனால், ஊழல் யார் செய்தார்கள்? எப்போது செய்தார்கள்? அதற்கு யார், யார் காரணம் என்று இருக்கிறது. இப்போது இருப்பவர்கள் செய்தார்களா? என்று பார்க்க வேண்டும். அதனை ஒரு குற்றப்பரம்பரையாக்க முடியாது. தாத்தா செய்த குற்றத்துக்கு பேரனை தண்டிக்க முடியாது.

கேள்வி:- மக்கள் எதிர்ப்பையும் மீறி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முயற்சி நடந்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான முயற்சிகள் நடந்து கொண்டு தான் வருகிறது. அதை எதிர்ப்பதற்கான ஆழமான எங்கள் தரப்பு கருத்துகளையும் கொடுத்து உள்ளோம். மக்கள் கூட இருக்கிறார்கள். அத்தனை கோடி மக்களின் கண்ணை மூடிவிட்டு மறுபடியும் திறப்பது சாத்தியம் இல்லை என்று நான் கருதுகிறேன்.

கேள்வி:- தமிழகத்தில் தொடர்ந்து விவசாய நிலங்களை குறி வைத்து மீத்தேன் எடுப்பது, ஹைட்ரோ கார்பன் எடுப்பது நடைபெற்று கொண்டு இருக்கிறது?

பதில்:- ஒரு நிலத்துக்கு அடியில் தங்கமும், வைரமும் இருக்கிறது, மேலே விவசாயம் நடக்கிறது என்றால் தங்கமும், வைரமும் வேண்டாம், விவசாயம் தான் வேண்டும். ஏனென்றால் பஞ்ச காலங்களில் தங்கத்தையும், வைரத்தையும் பொடித்து சாப்பிட முடியாது. 7 ஆயிரம் ஆண்டுகளாக மனிதன் மேற்கொண்டு வருவது விவசாயம் தான். அது தற்போது முன்னேறி கொண்டு இருக்கிறது. விஞ்ஞான வளர்ச்சியால் சந்திரனுக்கு போகலாம், செயற்கைகோள் பறக்கவிடலாம். ஆனால் சாப்பாட்டுக்கு விவசாயம் தான் முக்கியம். மாத்திரைகள் சாப்பிட்டு உயிர்வாழ முடியாது. அந்த நிலை வரக்கூடாது.

நீர்நிலை ஆதாரங்களும் முக்கியத்துவம் வாய்ந்தது. எல்லாவற்றிலும் கை வைப்பது என்பது கண்டிக்கத்தக்கது. பாரத தேசத்தின் கொல்லைப்புறமாக தமிழகம் மாறிவிடக்கூடாது. கழிவுகளை கொட்டும் இடமாக மாறிவிடக்கூடாது.

கேள்வி:- நீங்கள் மாணவர்களை சந்திப்பதை ஒரு சக்தி தடுப்பதாக நினைக்கிறீர்களா?

பதில்:- ஒரு சக்தி என்று சொல்ல வேண்டாம். வெட்ட வெளிச்சமாக சொல்கிறேன். அரசாங்கம் தான் மாணவர்களுடன் சந்திப்பதை ஊக்குவிக்க வேண்டாம் என்று அரசாணை வெளியிட்டுவிட்டு, அடுத்த நாளே முதல்-அமைச்சரே ஒரு கல்லூரிக்கு சென்று அரசியல் பேசிக்கொண்டு இருக்கிறார். அதனால், நாங்கள் பேசுவோம், வேறு யாரும் பேசக்கூடாது என்பது தான் உட்கருத்தாக நான் புரிந்துகொண்டது.

கேள்வி:- பெண்களுக்கான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. கவிஞர் வைரமுத்து அண்மையில் ஒரு பிரச்சினையில் சிக்கி உள்ளாரே?

பதில்:- சினிமா துறையில் மட்டும் அல்ல. எல்லா துறைகளிலும் இருக்கிறது. எனவே பாலியல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதற்கான தக்க பதிலை சொல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

சென்னையை சேர்ந்த சுதா என்பவர் பெண்கள் பாதுகாப்பிற்காக ‘ரவுத்திரம்’ என்ற செல்போன் செயலியை உருவாக்கினார். பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் மற்றும் பாதுகாப்பில் பிரச்சினைகள் ஏற்படும் போது இந்த செயலி மூலம் காவல்துறை மற்றும் பெற்றோர்கள் உதவி பெறமுடியும்.

இந்த பெண்கள் பாதுகாப்பிற்கான ‘ரவுத்திரம்’ செயலியின் தொடக்க விழா சென்னை தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு செயலியை வெளியிட்டார். இதில் சாய்ராம் கல்வி குழும செயல் அதிகாரி சாய்பிரகாஷ் லியோ முத்து, நடிகர் ராஜேஷ், பெங்களூரு ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா, கவிஞர் சினேகன், நடிகைகள் ஸ்ரீபிரியா, ரித்திகா, நடிகர் நாசர் மனைவி கமிலா நாசர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ-மாணவிகளோடு கமல்ஹாசன் கலந்துரையாடினார். அப்போது, நாடாளுமன்றத்தில் பல நல்ல விஷயங்கள் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. அதில் பெண்களுக்கான இடஒதுக்கீடும் ஒன்று. மக்கள் நீதி மய்யத்தை பொறுத்தவரையில், இத்தனை சதவீதம் என்று இல்லாமல் எத்தனை பேர் வந்தாலும் மக்கள் நீதி மய்யம் ஏற்றுக்கொள்ளும் என கூறினார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் விவசாயிகள் குடும்பங்களை சேர்ந்தவர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன் வருகிற டிசம்பர் மாதம் தமிழக அளவில் விவசாயிகள் மாநாடு நடத்தப்படும் என்று விவசாயிகளிடம் தெரிவித்தார். 

Next Story