கிறிஸ்தவ மதத்தில் இருந்து புத்த மதத்துக்கு மாறியவர் எஸ்.சி. சான்றிதழ் கேட்டு தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு


கிறிஸ்தவ மதத்தில் இருந்து புத்த மதத்துக்கு மாறியவர் எஸ்.சி. சான்றிதழ் கேட்டு தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 17 Oct 2018 10:00 PM GMT (Updated: 17 Oct 2018 7:54 PM GMT)

கிறிஸ்தவ மதத்தில் இருந்து புத்த மதத்துக்கு மாறியவர், ‘எஸ்.சி.’ சாதி சான்றிதழ் கேட்டு தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

கிறிஸ்தவ மதத்தில் இருந்து புத்த மதத்துக்கு மாறியவர், ‘எஸ்.சி.’ சாதி சான்றிதழ் கேட்டு தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், நிச்சம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஜி.ஜே.தமிழரசு. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது:-

என் பெற்றோர் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர்கள். 1970-ம் ஆண்டு பிறந்த எனக்கு விக்டர் ஜோசப் என்று பெயர் சூட்டினர். 1989-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் (பி.சி. வகுப்பை சேர்ந்தவர்) என்று குறிப்பிட்டு, ‘கிறிஸ்தவ ஆதிதிராவிடர்’ என்ற சாதி சான்றிதழ் எனக்கு வழங்கப்பட்டது.

கடந்த 2015-ம் ஆண்டு புத்த மதத்துக்கு மாறி, என் பெயரை தமிழரசு என்று மாற்றிக்கொண்டேன். சென்னை, வில்லிவாக்கத்தில் உள்ள இந்திய புத்தமத சங்கத்திடம் பதிவு செய்து, மதம் மாறியதற்கான சான்றிதழையும் பெற்றுக்கொண்டேன்.

பின்னர், ‘புத்தமதம் ஆதிதிராவிடர்’ என்று சாதி சான்றிதழ் கேட்டு பெருந்துறை தாசில்தாரிடம் விண்ணப்பம் செய்தேன். அவர், என் கோரிக்கையை நிராகரித்துவிட்டார். இதை எதிர்த்து ஈரோடு மண்டல வருவாய் அலுவலரிடம் (ஆர்.டி.ஓ.விடம்) மேல்முறையீடு செய்தேன்.

இதை நிராகரித்த அவர், ‘எஸ்.சி. என்ற சாதி சான்றிதழை பெற்று, அரசின் சலுகைகளை பெறவேண்டும் என்ற எண்ணத்துடன், நான் புத்த மதத்துக்கு மாறியுள்ளதாகவும், என் மனைவி, குழந்தைகள் மதம் மாறவில்லை என்றும், அதனால் என் கோரிக்கையை ஏற்க முடியாது’ என்று கூறி என் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

இவரது உத்தரவை எதிர்த்து ஈரோடு மாவட்ட கலெக்டரிடம் செய்த மறுஆய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே, எனக்கு புத்தமதத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் என்ற எஸ்.சி. சாதி சான்றிதழை வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் ஐ.ஜென்கின்ஸ் வில்லியம், ‘கிறிஸ்தவ ஆதிதிராவிடர் பெற்றோருக்கு பிறந்தவர்கள், பிற்காலத்தில் இந்து, புத்தம் அல்லது சீக்கிய மதங்களுக்கு மாறினால், அவர்களை அந்த மதத்தினர் ஏற்றுக்கொண்டால், அப்படி மதம் மாறியவர்களுக்கு எஸ்.சி. என்ற சாதி சான்றிதழை வழங்கவேண்டும்’ என்று தமிழக அரசு கடந்த 2009-ம் ஆண்டு அரசாணை வெளியிட்டது. இதன்படி, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் புத்த மதம் ஆதி திராவிடர் என்ற சாதி சான்றிதழ் பலருக்கு வழங்கப்பட்டுள்ளது’ என்று வாதிட்டார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் நர்மதா சம்பத், ‘இந்த அரசாணை மனுதாரருக்கு பொருந்தாது. ஒரு மதத்தில் இருந்து மாறியவர்கள் மீண்டும் அதே மதத்துக்கு, (தாய் மதத்துக்கு) திரும்பினால் மட்டுமே அந்த அரசாணை பொருந்தும். மனுதாரர், அவரது முன்னோர் இருந்த இந்து மதத்துக்கு திரும்பவில்லை. 3-வது மதமான புத்த மதத்துக்கு மாறியுள்ளார். மேலும், 1976-ம் ஆண்டு எஸ்.சி., எஸ்.டி, சட்டத்தில், புத்தமத ஆதிதிராவிடர் என்ற பெயரே இல்லை. எனவே, இவரது கோரிக்கையை ஏற்க முடியாது’ என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மனுதாரரின் தாத்தா இந்து மதத்தை சேர்ந்தவர். இவரது பெற்றோர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டனர். தற்போது, மனுதாரர் இந்து மதத்துக்கு மாறவில்லை. 3-வது மதமான புத்த மதத்துக்கு மாறியுள்ளார். இவரது முன்னோர் கள் யாரும் புத்த மதத்தை சேர்ந்தவர்களும் இல்லை.

இந்து மதத்தை சேர்ந்தவர்கள், கிறிஸ்தவ மதத்துக்கு மாறி, 2 அல்லது 3 தலைமுறைக்கு பின்னர், மீண்டும் இந்து மதத்துக்கு மாறினால், அவர்களை அந்த சமுதாயத்தினர் ஏற்றுக்கொண்டால், அப்படிப்பட்ட நபர்களுக்கு எஸ்.சி. என்ற சாதி சான்றிதழ் வழங்கலாம் என்று தான் தமிழக அரசின் அரசாணை கூறுகிறது. எனவே, இவரது மனுவை தள்ளுபடி செய்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Next Story