மாநில செய்திகள்

மதுரையில் பயங்கரம் வீட்டு வாசலில் கல்லூரி மாணவர் வெட்டி படுகொலை + "||" + College student cut and slaughtered

மதுரையில் பயங்கரம் வீட்டு வாசலில் கல்லூரி மாணவர் வெட்டி படுகொலை

மதுரையில் பயங்கரம் வீட்டு வாசலில் கல்லூரி மாணவர் வெட்டி படுகொலை
மதுரையில், வீட்டு வாசலில் கல்லூரி மாணவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
மதுரை,

மதுரை அனுப்பானடி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவருடைய மகன் பிரவீன்குமார் (வயது 20). மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பிரவீன்குமார் தனது வீட்டின் வாசலில் நின்று நண்பர் காளியுடன் பேசி கொண்டிருந்தார்.

அப்போது பயங்கர ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிள்களில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் பிரவீன்குமாரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது. இதனை தடுக்க முயன்ற காளியையும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

இதில் படுகாயம் அடைந்த பிரவீன்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காளி படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

அக்கம்பக்கத்தினர் காளியை மீட்டு சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் மதுரை தெப்பக்குளம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது பிரவீன்குமார் அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்றதாகவும், இதனால் அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சைலோ கண்ணன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதன்பின்பு அடிக்கடி அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டதால் ஆத்திரம் அடைந்த கண்ணன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பிரவீன்குமாரை கொலை செய்தது தெரியவந்தது.

மேலும் கண்ணன் இந்த கொலையை செய்வதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு அனுப்பானடி பகுதியை சேர்ந்த அரசமகாராஜன் (20) என்பவரை அரிவாளால் வெட்டியதும் தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக சைலோ கண்ணன், டோரி ராஜவேல் உள்பட 8 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.