சென்னையில் பன்றி காய்ச்சலுக்கு 2 பேர் பலி


சென்னையில் பன்றி காய்ச்சலுக்கு 2 பேர் பலி
x
தினத்தந்தி 29 Oct 2018 10:30 PM GMT (Updated: 29 Oct 2018 9:39 PM GMT)

சென்னையில், பன்றி காய்ச்சல் காரணமாக 2 பேர் பலியானார்கள்.

ஆவடி,

சென்னை ஆவடியை அடுத்த திருநின்றவூர் கோமதிபுரம் பிரதான சாலையில் வசித்து வந்தவர் நாதுராம் (வயது 38). இவர் திருநின்றவூர் சி.டி.எச். சாலையில் அடகு கடை வைத்து நடத்தி வந்தார். இவருடைய மனைவி கங்காதேவி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக நாதுராம், காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு காய்ச்சல் அதிகமானதால் நேற்று முன்தினம் சென்னை அண்ணாநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு நாதுராம் பரிதாபமாக இறந்தார்.

சென்னை பெரம்பூர் அடுத்த ஜமாலியா சேமாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிமாறன். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அருணா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். முதல் மகள் சங்கவி (7) இரண்டாவது மகள் பூமிகாஸ்ரீ(5). இருவரும் அங்குள்ள அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன் பூமிகாஸ்ரீ காய்ச்சல் ஏற்பட்டு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டார். தனியார் மருத்துவமனையில் பரிசோதித்ததில் சிறுமிக்கு பன்றி காய்ச்சல் இருப்பதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சிறுமி சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று காலை 7 மணியளவில் பரிதாபமாக உயிர் இழந்தாள். சிறுமி வைரல் காய்ச்சலால் உயிர் இழந்ததாக அரசு மருத்துவ சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சென்னை சூளைமேடு காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேலு. இவரது மகள் சிவஸ்ரீ (வயது 1½). சிவஸ்ரீ, கடந்த சில நாட்களாக காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டாள். அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு சிவஸ்ரீயை, அவளது பெற்றோர் அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். ஆனாலும் காய்ச்சலின் தீவிரம் குறையவில்லை.

இந்தநிலையில் சிவஸ்ரீயின் உடல்நிலை நேற்று முன்தினம் மோசமடைந்தது. மூச்சுவிடவே குழந்தை மிகவும் சிரமப்பட்டாள்.

இதையடுத்து சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சிவஸ்ரீ நேற்று முன்தினம் இரவு அனுமதிக்கப்பட்டாள். பரிசோதனையில் குழந்தைக்கு நிமோனியா காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி குழந்தை நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தது.

இந்த தகவலை அறிந்த சிவஸ்ரீயின் பெற்றோர் அலறி துடித்தனர். குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது, அங்கிருப்போர் அனைவரையும் பரிதாபம் கொள்ள செய்தது.

சிவஸ்ரீ டெங்கு காய்ச்சலால் உயிரிழந்து விட்டதாக தகவல் பரவியது. இதுகுறித்து எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் அரசர் சீராளர் கூறுகையில், “தாமதமான மற்றும் ஆபத்தான நிலையில் தான் சிவஸ்ரீ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். நிமோனியா காய்ச்சலால் நுரையீரலில் சளி பாதிப்பு அதிகமாகி, சுவாசிக்க சிக்கல் ஏற்பட்டதாலேயே குழந்தை உயிரிழந்திருக்கிறாள். பாதிப்பு முற்றிய நிலையில் வந்ததாலேயே குழந்தையை காப்பாற்ற முடியவில்லை”, என்றார்.

எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த மாதவரத்தை சேர்ந்த இரட்டை குழந்தைகள் தக்‌ஷன்(7) மற்றும் தீக்‌ஷா(7) ஆகியோர் டெங்கு காய்ச்சலால் கடந்த வாரம் உயிரிழந்தனர். இந்தநிலையில் மீண்டும் ஒரு உயிர்ப்பலி சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

Next Story