சர்கார் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம் - தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்


சர்கார் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம் - தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்
x
தினத்தந்தி 9 Nov 2018 5:47 AM GMT (Updated: 9 Nov 2018 5:47 AM GMT)

சர்கார் படத்திற்கான சென்சார் வேலைகள் காலை 10.30 மணி அளவில் தொடங்க உள்ளதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் இணைச்செயலாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார் . கதை திருட்டு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளை தாண்டி தீபாவளியன்று இப்படம் வெளியாகி பெரும் வசூல் சாதனை படைத்து வருகிறது.

இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், பழ கருப்பையா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ள வரலட்சுமி சரத்குமாருக்கு ஜெயலலிதாவின் இயற்பெயர் என கூறப்படும் கோமளவல்லி எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை விமர்சிப்பது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சை காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக தியேட்டர் உரிமையாளர் சஙகம் ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க இணைச்செயலாளர் ஸ்ரீதர் தனியார் டிவிக்கு  பேட்டி அளித்தார். அப்போது, சர்கார் படத்திற்கான சென்சார் வேலைகள் காலை 10.30 மணி அளவில் தொடங்குவதாகவும், சர்ச்சைக்குரிய காட்சிகள் அகற்றப்படும் என தயாரிப்பாளர்கள் உறுதி அளித்ததாகவும் தெரிவித்தார்.

சர்கார் திரைப்படத்தில் இருந்து மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் ஆகியவற்றை தூக்கி நெருப்பில் எரியும் காட்சி மற்றும் வரலட்சுமி கதாபாத்திரத்தின் பெயர் கோமளவல்லி என்பதை ஆடியோ கட் செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டார். இன்று மதியம் அல்லது மாலையில் திரையிடப்படும் காட்சிகளில் இந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெறாது எனவும் தெரிவித்தார்.

Next Story