தமிழக பொதுப்பணித்துறைக்கு ரூ.2 கோடி அபராதம் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு


தமிழக பொதுப்பணித்துறைக்கு ரூ.2 கோடி அபராதம் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
x
தினத்தந்தி 9 Nov 2018 9:16 PM GMT (Updated: 9 Nov 2018 9:16 PM GMT)

பருவமழை பாதிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்காத தமிழக பொதுப்பணித்துறைக்கு ரூ.2 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜவகர்லால் சண்முகம் கடந்த 2015-ம் ஆண்டு புதுடெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

சென்னை பக்கிங்காம் கால்வாய் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கால்வாய் தூர்வாரப்பட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டன. இதன்காரணமாக பருவமழை காலங்களில் வெள்ளம் ஏற்படும்போது தண்ணீர் சீராக செல்ல முடியாத நிலை உள்ளது.

இதனால் வெள்ளம் ஏற்பட்டு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

ரூ.603 கோடி ஒதுக்கீடு

பக்கிங்காம் கால்வாய் உள்பட பல்வேறு கால்வாய்களை சீரமைக்க ஜவகர்லால் நேரு தேசிய புனரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.603.67 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிதியின் கீழ் முறையாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

எனவே, பக்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றவும், கால்வாயை தூர்வாரும் பணியை மேற்கொள்ளவும் தமிழக பொதுப்பணித்துறை, சென்னை மாநகராட்சி, சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

நீதிபதி அதிருப்தி

இதேபோன்று மேலும் 4 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த தீர்ப்பாயம், இதுதொடர்பாக தமிழக பொதுப்பணித்துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில் அந்த வழக்கு தீர்ப்பாய தலைவர் நீதிபதி ஏ.கே.கோயல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையை பார்த்த நீதிபதி, அதிருப்தி அடைந்தார்.

ரூ.2 கோடி அபராதம்

பின்னர், பருவமழை பாதிப்பை தடுக்க தமிழக பொதுப்பணித்துறை முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி ரூ.2 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்த அபராத தொகையை தமிழக பொதுப்பணித்துறை, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி, பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் நலன்கருதி பக்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றுவது மற்றும் தூர்வாரும் பணிகளை மேற்கொள்வது போன்றவற்றை தமிழக அரசின் தலைமை செயலாளர் நேரடியாக மேற்பார்வையிட வேண்டும் என்றார்.

பின்னர், வழக்கு விசாரணையை அடுத்த மாதம்(டிசம்பர்) 12-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். அன்றையதினம் இந்த பணிகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story