மாநில செய்திகள்

தலைவர்களின் திட்டங்களை கொச்சைப்படுத்தினால் கட்சிக்காரர்கள் கொதித்து எழுவார்கள்முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி + "||" + Chief Minister Edattadi Palanisamy interview

தலைவர்களின் திட்டங்களை கொச்சைப்படுத்தினால் கட்சிக்காரர்கள் கொதித்து எழுவார்கள்முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

தலைவர்களின் திட்டங்களை கொச்சைப்படுத்தினால் கட்சிக்காரர்கள் கொதித்து எழுவார்கள்முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
தலைவர்களின் திட்டங்களை கொச்சைப்படுத்தினால் கட்சிக்காரர்கள் கொதித்து எழுவார்கள் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கோவை, 

கோவை விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விவரம் வருவாறு:-

கேள்வி:- சந்திரபாபு நாயுடு தமிழகத்தில் ஆட்சி நடக்கிறதா? என்று கேள்வி கேட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்?

பதில்:- சிரிப்புதான் வருகிறது. இவர்கள் அவ்வப்போது பச்சோந்தி போல் நிறம் மாறக் கூடியவர்கள். தி.மு.க. முதலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டதால், அவர்களுக்கு ஓரளவு பெரும்பான்மை கிடைத்தது.

அப்போது பா.ஜ.க. அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார்கள். இப்போது பா.ஜ.க. தீண்டத்தகாத கட்சி, மதவாத கட்சி என்று சொல்கிறார்கள். ஆனால், இவர்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய மந்திரியாக இருந்தபோது இதெல்லாம் கண்ணுக்கே தெரியவில்லை. நாங்கள் அப்படியல்ல, எங்கள் கொள்கையில் எப்போதும் பிடிப்போடு இருக்கிறோம்.

தமிழகத்திற்கு யார் நன்மை செய்கிறார்களோ? அப்போது ஆதரிக்கின்றோம், தமிழகத்திற்கு யார் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்களோ? அப்போது நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம்.

தமிழக மக்களுடைய உரிமைகளை காப்பதற்காகவும், தமிழக மக்களுக்கு நன்மை கிடைக்கின்ற திட்டங்களை பெறுவதற்காகவும் மத்திய அரசோடு இணக்கமாக இருக்கிறோமே தவிர, கூட்டணி கிடையாது.

சந்திரபாபு நாயுடு 2011-ல் பாரதீய ஜனதா கட்சியோடு கூட்டணி சேர்ந்து, போட்டியிட்டு வெற்றி பெற்று மந்திரி சபையில் இடம் பெற்றிருந்தார். 4½ ஆண்டு காலம் அனுபவித்து விட்டார்.

இப்போது தேர்தல் வரும்போது மாறிவிட்டார்கள். இவர்கள் பச்சோந்திபோல் நிறம் மாறுபவர்கள், கொள்கை பிடிப்பு கிடையாது. ஆனால் அ.தி.மு.க.வை பொறுத்தவரைக்கும் கொள்கை பிடிப்போடு இருக்கும் கட்சி, ஆட்சியும் அதே மாதிரிதான்.

அதேபோல் மத்தியில், தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய நன்மைகளை பெறுவதற்கு போராடி, வாதாடி நாங்கள் பெற்றுக்கொண்டிருக்கின்றோம். இப்போது இவ்வளவு பேசுகிறாரே, இப்பொழுது வந்துவிட்டு சென்றாரே சந்திரபாபு நாயுடு, தமிழகத்தில் பாலாற்றில் எவ்வளவு அணை கட்டுகிறார்கள். ஏதாவது பேசினாரா? பக்கத்தில் துரைமுருகன் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். உடனே கேட்க வேண்டியதுதானே? கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட தடுப்பணைகளை கட்டியிருக்கிறார். இன்றைக்கு பாலாறே வறண்டு போய்விட்டது.

உண்மையிலேயே மனசாட்சி இருந்தால், தமிழ்நாட்டு மக்கள் மீது அன்பு, பாசம், அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற எண்ணம் இருந்திருந்தால் இவர்கள் அதை கேட்டிருக்க வேண்டும், அந்த வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்திருந்தது.

நீங்கள் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தண்ணீரை தடுத்து நிறுத்துகிறீர்கள். தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய பெருங்குடி மக்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் இன்றைக்கு நீர் ஆதரமாக விளங்குவது இந்த வட மாவட்டத்தில் பாலாறுதான். ஆகவே, நீங்கள் அந்த தடுப்பணைகளை எல்லாம் இடித்துவிட்டு, எங்களுக்கு கிடைக்கவேண்டிய நீரை தயவு செய்து கொடுங்கள் என்று ஒரு வார்த்தையாவது கேட்டார்களா? ஆனால் அதிகாரம் தான் இவர்களுக்கு முக்கியம், பதவி தான் முக்கியம், ஆகவே, அவர்களுக்கு நாட்டு மக்களைப் பற்றியோ, தமிழ்நாட்டு விவசாயிகளைப் பற்றியோ கவலையே கிடையாது, அதிகாரம் மட்டும் தான் அவர்களுக்கு தேவை.

கேள்வி:- ‘சர்கார்’ பட பேனர்களை அ.தி.மு.க.காரர்கள் கிழித்தார்கள் என்று...

பதில்:- அ.தி.மு.க.காரர் தான் கிழித்தார் என்பது தவறான செய்தி. பொதுமக்கள் சேர்ந்து தம்முடைய எதிர்ப்பை தெரிவித்ததன் காரணத்தினால் அவர்கள் அந்த காட்சியை அகற்றி இருக்கிறார்கள். அந்தந்த தலைவர்கள் கொண்டுவந்த திட்டத்தை கொச்சைப்படுத்துகின்றபோது, அவமானப்படுத்துகின்றபோது தன்மானம் உள்ள கட்சிக்காரர்கள் கொதித்து எழுவார்கள்.

கேள்வி:- இந்த அரசு விரைவில் தடம்புரளும் என்று கமல் சொல்லி இருக்கின்றாரே?

பதில்:- கமல் 64 வயது வரை படத்தில் நடித்து, ஓய்வு பெற்ற பிறகு, மக்கள் அவரை கண்டு கொள்ளாததால், இப்போது அரசியலில் ஒரு நாடகம் நடத்திக்கொண்டிருக்கிறார்.

அரசியலில் அவருடைய நடிப்பு எடுபடாது. திரைப்படங்களில் 44 ஆண்டு காலம் நடித்தும் மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்த பிறகு அரசியலுக்கு வந்தா, அவருடைய நடிப்பு எடுபட போகிறது?

கேள்வி:- ‘சர்கார்’ பட விவகாரத்தில் தணிக்கை குழு அனுமதி அளித்த பிறகும் போராட்டம் நடத்தியது ஏன்?

பதில்:- அவர்கள் (திரைப்படத்துறையினர்) ரூ.300 கோடி, ரூ.400 கோடி பணம் போட்டு படம் எடுக்கின்றார்கள். எங்கிருந்து இந்த பணம் வந்தது. ஒரு படம் எடுப்பதற்கு ரூ.900 கோடி ஆகும் என்று சொல்கிறார்கள். இந்த பணம் எப்படி இவர்களுக்கு வருகிறது.

இத்துறையில் எவ்வளவு சம்பாதிக்கின்றார்கள். 2, 3 நாட்களுக்கு திரைப்படத்திற்கான டிக்கெட்டை அதிக விலை கொடுத்து ரசிகர்கள் வாங்குகின்றார்கள். ரசிகர்களின் ரத்தத்தை உறிஞ்சிவிடுகிறார்கள். ரூ.100 ரூபாய் டிக்கெட்டை ரூ.1,000-க்கு விற்பனை செய்கிறார்கள்.

ஜெயலலிதா காலத்திலேயே பேச்சுவார்த்தை நடத்தி, குறிப்பிட்ட விலைக்கு மேல் டிக்கெட் விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த துறையைச் சேர்ந்த அமைச்சர் தெளிவுபடுத்தி இருக்கின்றார்.

தியேட்டர் உரிமையாளர்களிடமும் இது தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அரசைப் பொறுத்தவரைக்கும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வேண்டும் என்றே திட்டமிட்டு சில நடிகர்கள் தங்களை வளமாக்குவதற்காக இப்படிப்பட்ட தவறான செய்தியை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

விலையில்லா பொருட்கள் 1 கோடியே 84 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. வசதி படைத்த மக்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்களை ஏழை-எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்கள், சாதாரண குடிசையில் இருக்கின்ற, கிராமத்தில் இருக்கின்ற மக்கள் தங்கள் வீட்டில் பயன்படுத்துகின்றார்கள்.

இயக்குனர் முருகதாசின் சொந்தக்காரர்கூட நிறைய வாங்கியிருக்கிறார். அதை எல்லாம் எடுத்திருக்கிறோம். அதுமட்டுமல்லாமல், விலையில்லா பொருள் என்றால் கல்வி விலை இல்லாமல் தான் கொடுக்கின்றோம். தனியார் பள்ளிக்குச் சென்று படிக்க முடியுமா? விலையில்லா கல்வி கொடுப்பதனால் தான் இவ்வளவு மாணவர்கள் படிக்கின்றார்கள்.

அதேபோல, விலையில்லா காலணி, புத்தகம், நோட்டு, பை, சைக்கிள், சீருடை, மடிக்கணினி என்று இவ்வளவும் கொடுத்து எடுத்த நடவடிக்கை காரணத்தினால்தான் இன்றைக்கு உயர்கல்வி படிக்கக்கூடிய மாணவர்கள் எண்ணிக்கை 46.8 சதவீதம் உயர்ந்து இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது.

இவர்கள் எல்லாம் ரூ.3.5 கோடி காரில், ஏ.சி.யில் செல்பவர்கள். ஒரு படத்திற்கு ரூ.50, ரூ.100 கோடி வாங்குபவர்கள். இவ்வளவு கோடி வாங்கி மக்களுக்கு எவ்வளவு செய்திருக்கிறார்கள்.

நான் 1974-ல் கட்சிக்கு வந்தேன். இன்றைக்கு 2018 வரை 44 ஆண்டு காலமாக கட்சிக்கு உழைத்து தான் இந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறேன். கமல்ஹாசன் 64 ஆண்டுகாலமாக படங்களில் நடித்துவிட்டு, ஒரு படப் பிரச்சினை வருகின்றபோது இந்த நாட்டை விட்டே ஓடிப்போகிறேன் என்றவர் எப்படி நாட்டுக்கு தலைவராக முடியும்.

அவருடைய பிரச்சினையையே அவர் தீர்க்க முடியாதபோது நாட்டு மக்களுடைய பிரச்சினையை எப்படி தீர்க்க முடியும்? அவற்றை எல்லாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகம் முழுவதும் மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
தமிழகம் முழுவதும் மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை