காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயல் சின்னமாக மாறுகிறது தமிழகத்தில் 14-ந் தேதி முதல் கனமழை பெய்யும்


காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயல் சின்னமாக மாறுகிறது தமிழகத்தில் 14-ந் தேதி முதல் கனமழை பெய்யும்
x
தினத்தந்தி 11 Nov 2018 12:15 AM GMT (Updated: 10 Nov 2018 10:58 PM GMT)

தமிழகத்தில் வருகிற 14-ந் தேதி முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை கடந்த 1-ந் தேதி தொடங்கியது.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இயல்பை விட 12 சதவீதம் அதிகம் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. ஆனால் இதுவரை எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. தென் மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்து உள்ளது. ஆனால் வடமாவட்டங்களில் மழை பெய்யாததால் வறட்சி நிலவுகிறது.

இந்த நிலையில் அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்து இருப்பதாகவும், அது புயலாக மாற இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

அந்தமான் கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து இருக்கிறது. அது, இன்று (அதாவது நேற்று) மாலை தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு அந்தமான் கடல் பகுதியில் போர்ட்பிளேர் நகருக்கு வடமேற்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டு இருந்தது. அதாவது சென்னையில் இருந்து கிழக்கு மற்றும் தென்கிழக்கே 1,340 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு இருந்தது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மாலை 5.30 மணி அளவில் புயலாக மாறுகிறது. அப்போது 75 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும். நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு தீவிர புயல் சின்னமாக மாறும். அந்த சமயத்தில் மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்.

அதன் பிறகு, அந்த புயல் 14-ந் தேதியன்று (புதன்கிழமை) வட தமிழகம், தெற்கு ஆந்திர பகுதியை நோக்கி நகரும்.

இதன் காரணமாக 14-ந் தேதி மாலையில் இருந்து வட கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். அதன்பிறகு உள்மாவட்டங்களில் மழை இருக்கும்.

புயல் கரையை நெருங்கும் போது 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

எனவே ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் 12-ந் தேதி (நாளை) இரவுக்குள் கரை திரும்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே குமரி கடல், இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக இருக்கிறது. அது மாலத்தீவு, குமரி கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் நிலைகொண்டு இருக்கிறது.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி தமிழகத்தை நோக்கி நகரும் என்றும், நாகப்பட்டினத்துக்கும் சென்னையை அடுத்த பழவேற்காட்டுக்கும் இடையே அது கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாகவும், ஆந்திரா, ஒடிசாவை நோக்கி செல்ல வாய்ப்பு இல்லை என்றும் தனியார் வானிலை அமைப்பு தெரிவித்து உள்ளது.

இந்த புயல் தீவிரம் அடையும் போது, அதற்கு ‘கஜா’ (யானை) என்று பெயர் சூட்டப்படும். இது இலங்கை வழங்கிய பெயர் ஆகும். புயல் கரையை நெருங்கும் வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே காணப்படும்.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதை தொடர்ந்து எண்ணூர் துறைமுகத்திலும் மற்றும் கடலூர், புதுச்சேரி, நாகை, பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களிலும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், குன்னூரில் 3 செ.மீ., ராதாபுரம், குழித்துறை, நாகர்கோவிலில் தலா 2 செ.மீ., இரணியல், நாங்குநேரி, மணிமுத்தாறு, குளச்சல், பாபநாசம், கன்னியாகுமரி, சேரன்மகாதேவி, தக்கலை, அம்பாசமுத்திரம், மயிலாடி, ஆத்தூரில் தலா ஒரு செ.மீ. மழை பெய்து உள்ளது.

Next Story