பட்டுக்கோட்டை பள்ளிவாசலில் 120 அடி உயர மனோரா கோபுரங்கள் இடிந்து விழுந்தன


பட்டுக்கோட்டை பள்ளிவாசலில் 120 அடி உயர மனோரா கோபுரங்கள் இடிந்து விழுந்தன
x
தினத்தந்தி 16 Nov 2018 10:45 PM GMT (Updated: 16 Nov 2018 8:39 PM GMT)

கஜா புயலின்போது பட்டுக்கோட்டை பள்ளிவாசலில் இருந்த 120 அடி உயர மனோரா கோபுரங்கள் இடிந்து விழுந்தன.

பட்டுக்கோட்டை,

கஜா புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக நாகை மாவட்டம் மட்டுமல்லாது தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களிலும் கடும் சேதம் ஏற்பட்டு உள்ளது. இந்த மூன்று மாவட்டங்களிலும் ஏராளமான மரங்கள் வேராடு சாய்ந்தும், முறிந்தும் விழுந்தன. மின்சார கம்பங்கள் சேதம் அடைந்தன. வீடுகள் சேதம் அடைந்தன.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையிலும் இந்த புயலின் தாக்கம் கடுமையாக இருந்தது. பட்டுக்கோட்டையில் நேற்று முன்தினம் வீசிய பலத்த புயல் காற்றின் காரணமாக பட்டுக்கோட்டை-வடசேரி சாலையில் உள்ள பள்ளிவாசலில் 120 அடி உயரத்தில் வைக்கப்பட்டு இருந்த இரண்டு மனோரா கோபுரங்கள் இடிந்து ரோட்டில் விழுந்தன. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வெளிநோயாளிகள் பிரிவு கட்டிடத்தில் தகரத்தினால் ஆன கூரை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த தகர கூரை புயல் காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அடித்து செல்லப்பட்டது. மேலும் மருத்துவமனையில் இருந்த 50-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. மரங்கள் விழுந்ததில் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்தன.

பட்டுக்கோட்டை கடைத்தெருவில் இருந்த ஓட்டல்கள், கடைகள், கட்டிடங்களில் போடப்பட்டு இருந்த தகர கூரைகள் காற்றில் பறந்து சென்று விட்டன. சாலைகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. தொலைதொடர்பு வசதி துண்டிக்கப்பட்டது. பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டு இருந்ததால் வாகன ஓட்டிகள் பெட்ரோல் போட முடியாமல் திண்டாடினார்கள்.

Next Story