‘புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நான் விரைவில் போக இருக்கிறேன்’ எடப்பாடி பழனிசாமி பேட்டி


‘புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நான் விரைவில் போக இருக்கிறேன்’ எடப்பாடி பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 16 Nov 2018 11:30 PM GMT (Updated: 16 Nov 2018 8:50 PM GMT)

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நான் விரைவில் போக இருக்கிறேன் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

திருச்செங்கோடு,

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் எல்லாம் பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள். இன்றைக்கு நடவடிக்கைகள் எப்படி இருந்தது?

பதில்:- தெளிவாக மேடையில் பேசியுள்ளேன். ஏற்கனவே, கஜா புயல் வந்தால் அரசு எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து துணை முதல்-அமைச்சர், மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் மூத்த இந்திய ஆட்சிப் பணியாளர்கள் கலந்து ஆலோசித்து நாம் எவ்வாறு முன்னேற்பாடு செய்ய வேண்டும் என்ற நிலைப்பாடுகள் எல்லாம் எடுத்து, அதற்கு தக்கவாறு அங்கே இருக்கின்ற கடலோர மாவட்டங்களில் உள்ள கலெக்டர்கள் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி, அதன்பேரிலே இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கேள்வி:- புயலால் ஏற்பட்டுள்ள சேதங்கள் இழப்பீடுகள் குறித்து...?

பதில்:- அதாவது காலையில் தான் புயல் அடித்து ஓய்ந்திருக்கிறது. இன்னும் மழை பெய்து கொண்டிருக்கிறது. மழை எல்லாம் நின்ற பிறகு தான், அது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வருவாய்துறை அதிகாரிகள், அதுபோல மீன்வளத்துறை அதிகாரிகள், உள்ளாட்சியை சேர்ந்த பிரதிநிதிகள், அந்த அதிகாரிகள் எல்லாம் அங்கே சென்று பார்வையிட்டு, எவ்வளவு சேதம் ஏற்பட்டு இருக்கிறது என்று மதிப்பீடு செய்து அறிக்கை அரசுக்கு தாக்கல் செய்த பிறகு தான், இழப்பீடு எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிவிக்க முடியும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கேள்வி:- தி.மு.க. தலைவர் பாராட்டு தெரிவிக்கிறார். ஆனால் கனிமொழி இப்படி குறை கூறுகிறாரே?

பதில்:- எதிர்க்கட்சி அப்படி தான் பேசுவார்கள். இதுவந்து யார் ஆட்சி செய்தாலும், இயற்கை மூலமாக ஏற்படுகின்ற சேதத்தை யார் தடுக்க முடியும். குறைக்க மட்டும் தான் முடியும். 111 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் அடித்தது என்று சொன்னால், யார் போய் அதை தடுத்து நிறுத்த முடியும். அது எப்படி எந்த திசையில் போகிறது என்று தெரியவில்லை. அது வானிலைக்கு ஏற்றவாறு அந்த திசை மாறுகிறது. இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் ஒரு கருத்து சொன்னது. ஆனால் வானிலை மாற்றம் காரணமாக மாறுபடுகிறது. இருந்தாலும் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த காரணத்தினால் அந்த பாதிப்பு எல்லாம் குறைக்கப்பட்டு இருக்கிறது.

கேள்வி:- பாதிக்கப்பட்ட பகுதிகளை நீங்கள் நேரில் பார்க்க இருக்கிறீர்களா?

பதில்:- விரைவில் போக இருக்கிறேன். நாளைய (இன்று) தினம் ஐந்து அமைச்சர்கள் செல்ல உள்ளார்கள். ஏற்கனவே பணிகள் எல்லாம் மேற்கொண்டு வருகிறார்கள். இன்றைக்கு மாவட்ட அமைச்சர்கள், காமராஜ் திருவாரூர் மாவட்டம், ஓ.எஸ். மணியன் நாகை மாவட்டம், துரைக்கண்ணு தஞ்சாவூர் மாவட்டம், மணிகண்டன் ராமநாதபுரம் மாவட்டம், விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டம், சம்பத் கடலூர் மாவட்டம் ஆகிய அமைச்சர்கள் எல்லாம் அங்கேயே இருந்து அந்த நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

கேள்வி: மத்திய அரசிடம் நிவாரணம் உதவி கேட்கிறீர்களா?

பதில்:- இன்று (நேற்று) மதியம், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தொடர்பு கொண்டு புயல் விவரங்கள் குறித்து கேட்ட போது, தமிழ்நாட்டில் கஜா புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களை விளக்கி சொன்னோம். தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கின்றோம். அவர்களும் இன்றைக்கு இந்த புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எல்லாம் அறிக்கையாக அனுப்ப வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். அதன் அடிப்படையிலே அறிக்கையை அவர்களுக்கு அனுப்பி வைத்து, நிவாரண உதவிகளை பெறுவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story