கஜா புயல் பாதிப்பு: நாகையில் அமைச்சர் உதயகுமார் ஆய்வு


கஜா புயல் பாதிப்பு: நாகையில் அமைச்சர் உதயகுமார் ஆய்வு
x
தினத்தந்தி 17 Nov 2018 6:17 AM GMT (Updated: 17 Nov 2018 6:17 AM GMT)

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள 7 மாவட்டங்களில் போக்குவரத்து, மின்விநியோகத்தை சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

நாகை

கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாகையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புயல்சேதங்களை பார்வையிட்டு, சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார்.  காடம்பாடியில், சாலையில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றுவதற்கான பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளவர்களை சந்தித்து அறிவுரைகளை வழங்கிய அவர், பின்னர் புயல்சேதங்களை பார்வையிட்டார்.

இதைத் தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர், சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருவதாக கூறினார்.  முதற்கட்டமாக மின்விநியோகத்தை சீர்செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. பேரிடர் மேலாண்மைத் துறையின் பணிகளை மு.க.ஸ்டாலின்  பாராட்டியிருப்பது பற்றி கேட்டபோது, அது நல்ல முன்னுதாரணம் என்றும்,  நல்லவற்றை, நல்லவர்கள் பாராட்டுவது தமிழர்களின் பண்பாடு என்றும் அமைச்சர் கூறினார்.

வேளாண் பயிர்கள் மற்றும் மீனவர்களின் படகுகள் சேதத்திற்கு, காப்பீடு மற்றும் பேரிடர் நிவாரண நிதி மூலமாக இழப்பீடு கொடுக்கப்படும் என அவர்  தெரிவித்தார். மாடு, ஆடு, கோழி உயிரிழப்புகளுக்கு இழப்பீடுகள் வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

நோய்கள் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறையில் இருந்து கூடுதல் மருத்துவக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன என்றும், கோடியக்கரை, வேதாரண்யம், நாகை பகுதிகளில் கூடுதல் ஆம்புலன்ஸ்கள் பணியில் உள்ளன என்றும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார். பாதிக்கப்பட்டவர்களை தேடிச்சென்று சுகாதார சேவைகள் வழங்கப்படுவதாகவும், சுகாதாரத்தை பின்பற்றுவதற்கான கையேடுகள் விநியோகிக்கப்படுகிறது.

புயல் சேத கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது, கள நிலவரம் குறித்து முதலமைச்சருக்கு தெரிவித்து வருகிறோம் என கூறினார்.

Next Story