புதுக்கோட்டை: புயல் சேதத்தை நேரில் ஆய்வு செய்தார் முதல்வர் பழனிசாமி


புதுக்கோட்டை: புயல் சேதத்தை நேரில் ஆய்வு செய்தார் முதல்வர் பழனிசாமி
x
தினத்தந்தி 20 Nov 2018 3:35 AM GMT (Updated: 20 Nov 2018 3:35 AM GMT)

புதுக்கோட்டை மாப்பிளையார் குளத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல் அமைச்சர் பழனிசாமி பார்வையிட்டார்.

புதுக்கோட்டை,

வங்க கடலில் உருவான கஜா புயல் நாகை மற்றும் வேதாரண்யம் இடையே கரையை கடந்தது.  இந்த புயலால் தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக பாதிப்படைந்தன. புயலால் இறந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.
 
இந்த நிலையில், புயல் பாதிப்பு பற்றி தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப்பணி மேற்கொள்ள தமிழக அரசு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. புயல் சேதத்தை மதிப்பிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் புயல் சேதத்தை பார்வையிட சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் இன்று காலை 5.30 மணிக்கு  புறப்பட்டார் பின்னர் திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு ஹெலிகாப்டரில் வந்த முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர், மச்சுவாடி, மாப்பிள்ளையார் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தனர். அங்கிருந்த அதிகாரிகள் , முதல்வருக்கு புயல் சேதம் பற்றி விளக்கினர்.  பின்னர், புயல் நிவாரண நிதியையும் பாதிக்கப்பட்டோருக்கு  முதல் அமைச்சர்  வழங்கினார். 


Next Story