புயல் பாதித்த மாவட்டங்களை பேரிடர் பகுதிகளாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் - முதலமைச்சர்


புயல் பாதித்த மாவட்டங்களை பேரிடர்  பகுதிகளாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் - முதலமைச்சர்
x
தினத்தந்தி 20 Nov 2018 5:25 AM GMT (Updated: 20 Nov 2018 5:25 AM GMT)

புயல் பாதித்த மாவட்டங்களை இயற்கைப் பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவிப்பது குறித்து பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக முதல் அமைச்சர் பழனிசாமி இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக திருச்சி வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக புதுக்கோட்டை வந்தார். பின்னர், புதுக்கோட்டை அருகாமையில் உள்ள மாப்பிள்ளையார் குளம், மச்சுவாடி உள்ளிட்ட பகுதிகளில் புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் நிருபர்களை  சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கஜா புயலின் கோர தாண்டவத்தால் கடுமையான சேதங்கள் ஏற்பட்டு உள்ளன. 

முன்கூட்டியே அரசு நடவடிக்கை எடுத்து, தாழ்வான மற்றும் குடிசைப் பகுதிகளில் இருந்தவர்களை நிவாரண முகாம்களில் தங்க வைத்ததால் பாதிப்புகளை குறைக்க முடிந்தது.

புயலுக்கு பிறகு மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்துதர, போர்க்கால அடிப்படையில் முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விவசாயிகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டிருப்பதால், அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும்.

புதுக்கோட்டை நகரம் முழுவதும் நாளை மாலைக்குள் மின்விநியோகம் முழுமையாக சீரடையும் என்றும், 4 அல்லது 5 நாட்களுக்குள் கிராம பகுதிகளுக்கும் மின்விநியோகம் சீரடையும்.

கேரளத்தில் இயற்கை சீற்றம் ஏற்பட்டபோது அங்குள்ள எதிர்க்கட்சிகள் அரசை குறைகூறவில்லை , தமிழகத்தில் எதிர்க்கட்சிகளுக்கு அந்த மனப்பக்குவம் இல்லை.

பாகுபாடுகளை மறந்து அனைவரும் உதவ முன்வர வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார்.

நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வரும் அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். புயலால் மரங்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளதாகவும், 1 லட்சம் மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகள், துணைமின்நிலையங்கள் சேதமடைந்துள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

புயல் பாதித்த மாவட்டங்களை இயற்கை பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியிருப்பது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும், அநேகமாக நாளை மறுநாள் நேரம் ஒதுக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

Next Story