ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து ஸ்டெர்லைட் ஆலை நீர் எடுக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை


ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து ஸ்டெர்லைட் ஆலை நீர் எடுக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை
x
தினத்தந்தி 29 Nov 2018 9:15 AM GMT (Updated: 29 Nov 2018 9:15 AM GMT)

ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து ஸ்டெர்லைட் ஆலை நீர் எடுக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.

புதுடெல்லி,

தூத்துக்குடியில் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த போராட்டம் கடந்த மே 22ந்தேதி வன்முறையாக வெடித்தது.

இதனை தொடர்ந்து போலீசார் வன்முறையை கட்டுப்படுத்த நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் பொதுமக்களில் 13 பேர் பலியாகினர்.

தொடர்ந்து பதற்றம் நீடித்த நிலையில், மக்களின் கோரிக்கையை ஏற்று ஆலையை மூட அரசாணை வெளியானது.

ஆனால், தூத்துக்குடி அருகே உள்ள தெற்கு வீரபாண்டியபுரம், அ.குமரெட்டியாபுரம், டி.குமாரகிரி ஆகிய பகுதி மக்கள் ஆலையை திறக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் லாரி உள்பட கனரக வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் என ஒட்டுமொத்தமாக 80 ஆயிரம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், தூத்துக்குடியில் அமைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மூடியது இயற்கை நீதிக்கு எதிரானது என்றும் ஆலையை திறக்கலாம் என்றும் மேகாலயா மாநிலத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான உண்மை கண்டறியும் குழு, தேசிய பசுமைத்தீர்ப்பு ஆயத்தின் தலைமை அமர்வில் அறிக்கை அளித்தது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில், ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து ஸ்டெர்லைட் உள்ளிட்ட ஆலைகள் நீர் எடுப்பதற்கு தடை விதிக்க வலியுறுத்தி தி.மு.க.வை சேர்ந்த ஜோயல் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதன் மீது நடந்த விசாரணையில், தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் உள்ளிட்ட ஆலைகள் நீர் எடுப்பதற்கு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.  அணையில் இருந்து குடிநீர் தவிர வேறு எந்த பயன்பாட்டுக்கும் நீர் எடுக்கக்கூடாது என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Next Story