சட்டவிரோத பேனர்களில் அச்சடிக்கப்படும் புகைப்படத்தில் இடம் பெற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை போலீசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


சட்டவிரோத பேனர்களில் அச்சடிக்கப்படும் புகைப்படத்தில் இடம் பெற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை போலீசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 29 Nov 2018 10:11 PM GMT (Updated: 29 Nov 2018 10:11 PM GMT)

சட்டவிரோத பேனர்களில் அச்சடிக்கப்படும் புகைப்படத்தில் இடம் பெற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை போலீசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை,

சட்டவிரோதமாக வைக்கப்படும் பேனர்களின் புகைப்படங்களில் இடம்பெற்றவர்கள், அந்த பேனர்களை அச்சடித்தவர்கள், பேனர்கள் வைக்க நிதி உதவி செய்தவர்கள், பேனர்களை வைக்க உத்தரவிட்டவர்கள் உள்ளிட்டோர் மீது இரும்புகரம் கொண்டு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளனர்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டை முன்னிட்டு, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் அனுமதியின்றி சட்டவிரோதமாக பேனர்கள் வைக்கப்பட்டதாகவும், இனி பேனர்களை வைக்க தமிழகம் முழுவதும் யாருக்கும் அனுமதி வழங்க கூடாது என்று அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி பொது நல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு பிளடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆஜராகி, சட்டவிரோதமாக வைக்கப்படும் பேனர்கள் உடனுக்குடன் அகற்றப்படுவதாகவும், நீதிமன்ற உத்தரவுகள் உடனடியாக அமல்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை படித்து பார்த்த நீதிபதிகள், ‘பொதுவாகவே அரசியல்கட்சியினர் சட்டத்தை மதித்து நடப்பதில்லை’ என்று வேதனை தெரிவித்தனர். பின்னர், ‘அரசியல் நிகழ்ச்சிகளுக்காக மட்டும் ஒரேநாளில் பேனர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த அனுமதியையும் தாண்டி சட்டவிரோதமாக பேனர்களை பல இடங்களில் அரசியல் கட்சியினர் வைக்கின்றனர். பேனர்கள் வைக்க ஒரே நாளில் அனுமதி வழங்கும் தமிழக அரசின் வேகம், பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்வு காண்பதிலும் காட்டினால், நன்றாக இருக்கும். சட்டவிரோதமாக வைக்கப்படும் பேனர்களால் பொதுமக்களுக்கு எவ்வளவு இடையூறு ஏற்படுகிறது? என்பதை மெரினா கடற்கரை முன்புள்ள காமராஜர் சாலையில் வரும்போது நாங்களே (நீதிபதிகளே) கண்கூடாகப் பார்க்கிறோம். இந்த பேனர்களை அகற்ற முன்வராமல் போலீசார் வேடிக்கை தான் பார்க்கின்றனர்’ என்று நீதிபதிகள் கூறினர்.

மேலும், ‘நீதிமன்றம் அரசு எந்திரத்தின் நடவடிக்கையை கண்காணிக்கத்தான் முடியும். எனவே, சட்டவிரோத பேனர்கள் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்ற விவரங்களை அரசு தரப்பில் விரிவான அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும். மேலும், சட்டவிரோதமாக வைக்கப்படும் பேனர்களில் உள்ள புகைப்படங்களில் இடம்பெற்றவர்களுக்கும், அந்த பேனர்களை அச்சடித்தவர்களுக்கும், பேனர்களை வைக்க கட்டளை மற்றும் நிதியுதவி அளிப்பவர்களுக்கும் போலீசார் சம்மன் அனுப்பி விசாரிக்கவேண்டும். அவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் சட்டவிரோத பேனர்கள் வைக்கும் செயல் குறையும்’ என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற டிசம்பர் 5-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Next Story