ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க உதவுவதுபோல் நடித்து ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரிடம் ரூ.20 ஆயிரம் நூதன திருட்டு விருகம்பாக்கத்தில் தொடரும் சம்பவம்
ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க உதவுவதுபோல் நடித்து ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரிடம் ரூ.20 ஆயிரத்தை நூதன முறையில் திருடிச் சென்ற மர்ம வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பூந்தமல்லி,
ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க உதவுவதுபோல் நடித்து ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரிடம் ரூ.20 ஆயிரத்தை நூதன முறையில் திருடிச் சென்ற மர்ம வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். விருகம்பாக்கத்தில் தொடரும் சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் அரூர், திரு.வி.க. நகரைச் சேர்ந்தவர் திருவேங்கடம்(வயது 65). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை கே.கே.நகரில் உள்ள தனது மகன் வீட்டுக்கு வந்தார்.
நேற்றுமுன்தினம் மாலை தனது மகனின் மொபட்டை எடுத்துக்கொண்டு விருகம்பாக்கம், அபுசாலி தெருவில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார். அங்கு வந்த வாலிபர், அவருக்கு பணம் எடுக்க உதவி செய்தார். பின்னர் அவர் அங்கிருந்து சென்று விட்டார்.
ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்துக் கொண்டு திருவேங்கடம் வீட்டுக்கு சென்றார். அப்போது சின்மயா நகர் ஏ.டி.எம். மையத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.20 ஆயிரம் எடுக்கப்பட்டதாக அவரது செல்போனுக்கு குறுந்தகவல்(எஸ்.எம்.எஸ்.) வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அப்போது தான் தன்னிடமிருந்த ஏ.டி.எம். கார்டை எடுத்து பார்த்தார். அது தனது கார்டு இல்லை என்பது தெரிந்தது. ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்து கொடுத்த வாலிபர், தனக்கு பணம் எடுக்க உதவுவதுபோல் நடித்து, போலியான ஏ.டி.எம். கார்டை கொடுத்துவிட்டு, தனது கார்டை அவர் எடுத்துச் சென்று சின்மயா நகரில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் ரூ.20 ஆயிரத்தை நூதன முறையில் திருடிச் சென்று இருப்பது அவருக்கு தெரியவந்தது.
இது குறித்து திருவேங்கடம் அளித்த புகாரின்பேரில் விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த வங்கி ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு விருகம்பாக்கம் வெங்கடேஷ் நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு மருத்துவ பெண் அதிகாரி நாராயணி(75), விருகம்பாக்கம் விநாயகம் சாலையில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்கச் சென்றார். அங்கு வந்த வாலிபர், அவருக்கு பணம் எடுக்க உதவுவதுபோல் நடித்து அவரது ஏ.டி.எம். கார்டை எடுத்துக்கொண்டு, போலியான கார்டை நாராயணியிடம் கொடுத்தார். பின்னர் அந்த ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி நூதனமுறையில் ரூ.37 ஆயிரத்தை திருடிச் சென்று விட்டார்.
விருகம்பாக்கம் பகுதியில் தொடர்ந்து முதியவர்களை குறித்து நடைபெறும் இதுபோன்ற நூதன திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இந்த 2 சம்பவத்திலும் ஒரே நபர்தான் ஈடுபட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story