தமிழகத்தில் தண்ணீர் இல்லாததால் புல் கூட வளராத நிலையில், தாமரை எப்படி மலரும்? -மு.க. ஸ்டாலின்


தமிழகத்தில் தண்ணீர் இல்லாததால் புல் கூட வளராத நிலையில், தாமரை எப்படி மலரும்? -மு.க. ஸ்டாலின்
x
தினத்தந்தி 4 Dec 2018 2:20 PM IST (Updated: 4 Dec 2018 2:20 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் தண்ணீர் இல்லாததால் புல் கூட வளராத நிலையில், தாமரை எப்படி மலரும்? என திமுக தலைவர் மு.க .ஸ்டாலின் கூறினார்.

திருச்சி,

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் அருகே மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே அணைகட்டவும், 400 மெகாவாட் நீர் மின்சாரம் தயாரிக்கவும் கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அணை கட்டுவதற்கான பணியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், ஆரம்ப கட்ட ஆய்வு நடத்த கர்நாடகா அரசின் சார்பில் மத்திய நீர்வளத்துறை ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டு இருந்தது. அணைகட்ட தமிழகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆய்வு நடத்தவும், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும் கர்நாடக அரசுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இதை கண்டித்து, திருச்சி உழவர் சந்தை மைதானத்தில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில், போராட்டம் நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் திராவிட கழக  தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ்  தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்பட  கூட்டணி கட்சிகளின் தலைவர்கள்  கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:- 

மேகதாது விவகாரத்தில் தேர்தலுக்காகவோ, அரசியலுக்காகவோ போராடவில்லை. காவிரியை தடுக்கும் பணிகளில் கர்நாடக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்கு நிச்சயம் தண்ணீர் வராது.

கர்நாடகா மீது அவர்களுக்கு பாசம். குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பதால் ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறது பாஜக!

தமிழகத்தில் தண்ணீர் இல்லாததால் புல் கூட வளராத நிலையில், தாமரை எப்படி மலரும்?

இயற்கை இடர்பாட்டை ஏற்றுக் கொள்ளலாம். மேகதாது போன்ற செயற்கை இடர்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது. மேகதாது பிரச்சினைக்கு முழு காரணம் தமிழக அரசு தான்.

கஜா புயல் போன்ற பேரிடர் வேறு மாநிலத்தில் நிகழ்ந்திருந்தால் பிரதமர் நேரில் சென்றிருப்பார், பல ஆயிரம் கோடி நிதி வழங்கியிருப்பார்.

கஜா புயலில் இருந்து தமிழகம் மீண்டு வர 20 ஆண்டுகாலம் ஆகும். போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றால் இயற்கை பேரிடர் சட்டம் எதற்கு?   இவ்வாறு அவர் கூறினார். 

Next Story