ஓட்டுக்கு பணம் கொடுத்த விவகாரம்: வழக்கு விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


ஓட்டுக்கு பணம் கொடுத்த விவகாரம்: வழக்கு விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 4 Dec 2018 9:09 PM GMT (Updated: 4 Dec 2018 9:09 PM GMT)

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க. தலைவர்கள் மூலமாக வாக்காளர்களுக்கு ரூ.89.65 கோடி கையூட்டு கொடுத்தது தொடர்பான வழக்கு விசாரணை நடத்தப்படாமலேயே தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசியலின் தலையெழுத்தையே மாற்றியமைக்கக் கூடிய வழக்குக்கு ஆட்சியாளர்களால் சந்தடி இல்லாமல் சாவுமணி அடிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழகத்தில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்குக்கு யாருக்குமே தெரியாமல் மூடுவிழா நடத்தப்பட்டிருப்பது மன்னிக்க முடியாத நீதிப் படுகொலை ஆகும். ஆட்சியாளர்கள் நினைத்தால் நீதி தேவதையின் இரு கண்களையும் நிரந்தரமாகவே மூடி, எந்த வழக்கையும் குழிதோண்டி புதைக்க முடியும் என்பதற்கு இந்த வழக்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டதற்கு யார் தரப்பில் எத்தகைய விளக்கம் அளிக்கப்பட்டாலும் அதை ஏற்க முடியாது; ஏற்றுக்கொள்ளவும் கூடாது.

அனைத்து தரப்பும் பொறுப்பு

இவ்வழக்கு ரத்து செய்யப்பட்டதற்கு ஒரு தரப்பை மட்டும் குறைகூற முடியாது. காவல்துறை, நீதித்துறை, தேர்தல் ஆணையம், வருமானவரித்துறை உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தான் பொறுப்பேற்க வேண்டும். தேர்தலில் வாக்காளர்களுக்கு கையூட்டு கொடுத்ததாக பதிவு செய்யப்படும் அனைத்து வழக்குகளுக்கும் இதே கதி தான் ஏற்படுகிறது.

இந்நிலையை மாற்ற இத்தகைய வழக்குகளில் தேர்தல் ஆணையத்தையும் ஒரு தரப்பாக சேர்க்க வேண்டும் அல்லது வழக்கை கண்காணிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு வழங்க வேண்டும். இந்த 2 ஏற்பாடுகளுமே செய்யப்படாததால் தான் ஓட்டுக்கு பணம் கொடுத்த அனைவருமே எந்த தண்டனையும் இல்லாமல் தப்பித்துக்கொள்கின்றனர். இப்போதும் இந்த ஓட்டையைப் பயன்படுத்தி தான் இவ்வழக்கில் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டிய முதல்- அமைச்சர் உள்ளிட்டோர் தப்பியுள்ளனர்.

சி.பி.ஐ. விசாரணை

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தி இந்த ஆதாரங்களைக் கைப்பற்றிய வருமானவரித்துறையே அவர் மீது நிதி முறைகேடு வழக்குத் தொடர்ந்து தண்டித்திருக்க முடியும். ஆனாலும், ஏதோ காரணத்தால் விஜயபாஸ்கர் மீது வருமானவரித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது நீதியைக் காக்காது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி கொடுத்தவர்கள் தண்டிக்கப்படாவிட்டால் ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள். எனவே, ஓட்டுக்கு பணம் கொடுத்தது தொடர்பான வழக்கில் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களை சேர்த்து அந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.யிடம் அரசு ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story