தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு


தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு
x
தினத்தந்தி 6 Dec 2018 12:00 AM GMT (Updated: 5 Dec 2018 10:48 PM GMT)

தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் அனேக இடங்களில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. சென்னையிலும் சில இடங்களில் நேற்று மழை பெய்தது. சென்னையை பொறுத்தமட்டில் கடந்த 2 தினங்களாக வித்தியாசமான பருவநிலை காணப்படுகிறது.

அதாவது காலையில் மழை பெய்வதும், பிற்பகலில் வெயில் சுட்டெரிப்பதும், இரவில் பனிப்பொழிவும் என 3 பருவ நிலைகள் நிலவுகிறது. இந்தநிலையில் இன்று (வியாழக்கிழமை) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை

சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

குமரிக்கடல் முதல் தெற்கு ஆந்திர கடற்கரை வரை நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு திசை நோக்கி நகர்ந்து, தற்போது குமரிக்கடல் முதல் வடக்கு கேரளா பகுதி வரை நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய கடல் பகுதியில் நாளை (இன்று) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். எனவே தெற்கு வங்கக்கடல், தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு 6-ந் தேதி மற்றும் 7-ந் தேதி மீனவர்கள் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னை மற்றும் அதன் புறநகரை பொறுத்தவரையில் நகரின் சில இடங்களில் ஓரிரு முறை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சோழவரத்தில் 8 செ.மீ. மழை

நேற்று காலை 8.30 மணியோடு நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி பதிவாகிய மழை அளவு விவரம் வருமாறு:-

சோழவரத்தில் அதிகபட்சமாக 8 செ.மீ. மழை பதிவாகியிருக்கிறது. தாமரைப்பாக்கத்தில் 5 செ.மீ., பழனியில் 4 செ.மீ., பூந்தமல்லி, பாபநாசத்தில் தலா 3 செ.மீ., போளூர், சென்னை விமான நிலையம், ஆணைக்காரன்சத்திரம், மணிமுத்தாறு, பொன்னேரி, பட்டுக்கோட்டை, கொடைக்கானல், குமாரபாளையம், செங்குன்றத்தில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

காஞ்சீபுரம், கடலூர், மாமல்லபுரம், செம்பரம்பாக்கம், தாம்பரம், வேதாரண்யம், தஞ்சாவூர், முத்துப்பேட்டை, கேளம்பாக்கம், சங்கரன்கோவில், விருதுநகர், தென்காசி, செங்கோட்டை, அம்பாசமுத்திரத்தில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.


சென்னையில் 3 பருவநிலை நிலவ காரணம் என்ன?

சென்னையில் ஒரே நாளில் மழை, வெயில் மற்றும் பனிப்பொழிவு என 3 பருவநிலை நிலவுவதற்கு காரணம் என்ன? என்பது குறித்து பாலச்சந்திரனிடம் கேட்டபோது, “தற்போது வலுவான வானிலை இல்லை. காற்றழுத்த தாழ்வு நிலை நகர்ந்து செல்லும்போது அதனுடைய அழுத்தத்தால் பரவலாக மழை பெய்கிறது. எங்கெல்லாம் காற்றழுத்த தாழ்வு நிலையை எதிர்க்கும் சூழல் நிலவுகிறதோ, அங்கெல்லாம் மழை பெய்கிறது. இதில் பகல் நேரத்துக்கும், இரவு நேரத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது” என்றார்.

Next Story