‘நெல்’ ஜெயராமன் மரணம்; அரசியல் தலைவர்கள் அஞ்சலி எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இரங்கல்


‘நெல்’ ஜெயராமன் மரணம்; அரசியல் தலைவர்கள் அஞ்சலி எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இரங்கல்
x
தினத்தந்தி 6 Dec 2018 10:15 PM GMT (Updated: 6 Dec 2018 7:57 PM GMT)

புற்றுநோய் பாதிப்புக்கு சென்னையில் சிகிச்சை பெற்று வந்த ‘நெல்’ ஜெயராமன் மரணமடைந்தார். அவரது உடலுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

சென்னை, 

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், கட்டிமேடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். வயது 54. ‘நமது நெல்லை காப்போம்’ என்ற இயக்கத்தை நடத்தி வந்த அவர், பாரம்பரிய நெல் ரகங்களை தமிழக விவசாயிகளிடம் பிரபலப்படுத்தினார். 174 நெல் ரகங்களை அழிவில் இருந்து மீட்டெடுத்த பெருமையும் அவரையே சாரும். அதனால், வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரால் ‘நெல்’ ஜெயராமன் என்று பாராட்டப்பட்டார். ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரிய நெல் கண்காட்சியை நடத்தி இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தினார்.

புற்றுநோய் பாதிப்பு காரணமாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அதிகாலை மரணமடைந்தார். அவரது உடல் பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக தேனாம்பேட்டை ரத்னா நகரில் வைக்கப்பட்டிருந்தது.

தலைவர்கள் நேரில் அஞ்சலி

‘நெல்’ ஜெயராமன் உடலுக்கு அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், காமராஜ், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை பொதுச் செயலாளர் தனியரசு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன், தமிழக விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன், இயக்குனர் தங்கர்பச்சான், நடிகர் கார்த்தி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து, நேற்று மதியம் ‘நெல்’ ஜெயராமனின் உடல், அவரது சொந்த ஊரான கட்டிமேடு கிராமத்துக்கு வேனில் எடுத்துச் செல்லப்பட்டது. நேற்று இரவு கட்டிமேடுவில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. இறுதிச் சடங்குகள் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் நடைபெறுகிறது.

முதல்-அமைச்சர் இரங்கல்

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

நமது பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கும் அரும்பணியை ஆற்றிய ‘நெல்’ ஜெயராமன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து, விவசாயிகளிடையே பிரபலபடுத்தி உள்ளார்.

விவசாயிகளிடையே பாரம்பரிய நெல் ரகங்களை பிரபலப்படுத்தி, அதன் உற்பத்தியை ஊக்கப்படுத்திய ஜெயராமனின் மறைவு தமிழ்நாட்டிற்கும், வேளாண்மைத் துறைக்கும் ஒரு பேரிழப்பாகும்.

ஜெயராமனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், வேளாண் பெருங்குடி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின்

‘நெல்’ ஜெயராமன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழ்நாட்டின் மண் வளம் காக்க தன் வாழ்வை அர்ப்பணித்த ‘நெல்’ ஜெயராமன் மறைவுக்கு என் சார்பிலும், தி.மு.க. சார்பிலும் இறுதி வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் பிரிவால் துயர்படும் குடும்பத்தினர், நண்பர்கள், இயற்கை ஆர்வலர்கள் அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இயற்கை வேளாண்மை மற்றும் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் நெல் ஜெயராமன் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் வேளாண் சமுதாயத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நெல் ஜெயராமனின் மறைவு பாரம்பரிய வேளாண்மையை மீட்டெடுக்கும் முயற்சியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக கருதுகிறோம். நெல் ஜெயராமனின் மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை என் சார்பிலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பிலும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

வைகோ

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சங்க காலந்தொட்டுப் பல ஆயிரக்கணக்கான நெல் வகைகளைக் கண்டு அறிந்து பயன்படுத்தி, உழவுத் தொழிலில் உலகம் வியக்க வாழ்ந்த தமிழகத்தில், அழிவின் விளிம்பில் இருந்த 174 நெல் விதைகளைக் கண்டு அறிந்து சேகரிப்பதற்காக தமிழகம் முழுமையும் சுற்றித் திரிந்த ஜெயராமன், இந்த உலகில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அவரது மறைவு, தமிழக விவசாயத்துக்கு இழப்பு. அவரது உறவினர்கள், நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நெல் ஜெயராமனின் மறைவு அவரது குடும்பத்தாருக்கும், விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு ஆகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உற்றார் - உறவினர்களுக்கும், விவசாயப் பெருங்குடி மக்களுக்கும் த.மா.கா. சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழர்களின் மரபும், வரலாறும் உணவுடன் உறவாடிக் கிடந்ததை உணர்ந்து, அதை மீட்டெடுத்து பாதுகாத்த நெல் ஜெயராமனின் மறைவு நம் அனைவருக்கும் பேரிழப்பு. அவர் பாதுகாத்திட்ட பாரம்பரிய நெல் போல அவரின் சிந்தனையையும், செயலையும் நாம் ஒவ்வொருவரும் பாதுகாத்திட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில தலைவர் இரா.முத்தரசன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் ந.சேதுராமன், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம், திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் உள்ளிட்டோரும் ‘நெல்’ ஜெயராமன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Next Story