‘கொடிநாள் நிதிக்கு தாராளமாக வழங்குங்கள்’ தமிழக மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்


‘கொடிநாள் நிதிக்கு தாராளமாக வழங்குங்கள்’ தமிழக மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்
x
தினத்தந்தி 6 Dec 2018 10:30 PM GMT (Updated: 6 Dec 2018 8:07 PM GMT)

நாட்டுப்பற்றையும், ஈகை குணத்தையும் வெளிப்படுத்திட கொடிநாள் நிதிக்கு தாராளமாக நிதி வழங்குங்கள் என்று தமிழக மக்களுக்கு முதல்-அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள கொடிநாள் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-

நம் தாய் திருநாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் புனிதப் பணியில் ஈடுபட்டுள்ள முப்படை வீரர்களின் சேவையையும், தியாகத்தையும் போற்றும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 7-ந்தேதி (இன்று) நாடு முழுவதும் படை வீரர் கொடி நாளாக அனுசரிக்கப்படுகிறது. இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்திருக்கும் நமது பாரத நாட்டின் எல்லைப் பகுதிகளை இரவு பகல் பாராது காவல் காப்பதோடு, புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின் போதும் நாட்டு மக்களை காக்கும் முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் பேணிக் காத்திடுவது நமது சமூகக் கடமையாகும்.

தாய் நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை கொடுக்கும் தியாக சீலர்களான நமது முப்படை வீரர்களின் நலன் காத்திடவும், அவர்தம் குடும்பங்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, பல நலத் திட்டங்களை வகுத்து, சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது.

தாராளமாக நிதி வழங்குங்கள்

போரில் உயிரிழந்த படைவீரர்களின் வாரிசுதாரர்களுக்கு உயர்த்தப்பட்ட கருணைத் தொகை மற்றும் கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குதல், முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகள் பட்டப்படிப்புகள் மற்றும் பட்ட மேற்படிப்புகள் படிப்பதற்கான கல்வி உதவித் தொகையை உயர்த்தி வழங்குதல், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர்க்கு மருத்துவ நிவாரண நிதியுதவித் தொகையை உயர்த்தி வழங்குதல், தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழகத்தின் வழியாக முன்னாள் படைவீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை அ.தி.மு.க. அரசு செவ்வனே செயல்படுத்தி வருகிறது.

கொடி விற்பனை மூலம் திரட்டப்படும் நிதியானது, முப்படை வீரர்களின் குடும்ப நல்வாழ்விற்காகவும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்விற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த சிறப்புமிக்க பணிகள் சீரிய முறையில் தொடர்ந்திடவும், தமிழ்நாட்டு மக்களின் நாட்டுப்பற்றையும், ஈகை குணத்தையும் வெளிப்படுத்திடவும், கொடிநாள் நிதிக்கு தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தாராளமாக நிதி வழங்கி சிறப்பிக்க வேண்டும் என நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஓ.பன்னீர் செல்வம்

தமிழக இளைஞர்கள் பெருமளவில் முப்படையில் சேர வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கொடிநாள் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

ஈகை குணத்துடன் வாரி வழங்கி, கொடிநாள் வசூலில் தமிழகம் முன்னிலை காணவும், முப்படைப் பணி அலுவலர்களாக நமது தமிழக இளைஞர்களை பெருமளவில் சேர்த்திடவும் இக்கொடி நாளில் உறுதி ஏற்போம் என்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது வாழ்த்து செய்தியில் கூறியிருக்கிறார்.

Next Story