கட்சி கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


கட்சி கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 8 Dec 2018 11:15 PM GMT (Updated: 8 Dec 2018 8:58 PM GMT)

தமிழகம் முழுவதும் சாலைகளையும், நடைபாதைகளையும் மறித்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சேலத்தை சேர்ந்தவர் ஏ.ராதாகிருஷ்ணன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில் கூறியிருப்பதாவது:-

கொடிக்கம்பங்கள்

அரசியல் கட்சிகள், சாலையோரம், நடைபாதைகளில் தங்கள் கட்சிக் கொடிகளை நடுகின்றன. சாலையை மறித்து அலங்கார வளைவுகளையும் அமைக்கின்றனர். இவ்வாறு பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் வைக்க அரசியல் கட்சிகள் முறையான அனுமதியை உள்ளாட்சி அமைப்புகளிடம் பெறுவது இல்லை.

அவ்வாறு வைக்கப்படும் கொடிக்கம்பங்களை அகற்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய உள்ளாட்சி அமைப்புகளும், எந்த நடவடிக்கைகளையும் எடுக்காமல், அமைதியாக இருக்கின்றன. பெரும்பாலான கொடிக்கம்பங்கள், சாலைகளையும், நடைபாதைகளையும் மறித்து வைக்கப்படுகின்றன.

சட்டம்-ஒழுங்கு

இதனால், போக்குவரத்து இடையூறும், பொதுமக்களுக்கும் சிரமமும் ஏற்படுகிறது. மேலும், பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்றவேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் விதிகளை உருவாக்கியுள்ளது.

இதன்படி, அரசியல் கட்சிகளினால் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்கள், விளம்பர பலகைகளை அப்புறப்படுத்த தமிழக காவல்துறைக்கும், வருவாய் துறைக்கும் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அப்படி உத்தரவிட்டும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் கொடிக்கம்பங்களை வைப்பதிலும், அரசியல் கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்படுகிறது. இதனால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உருவாகுகிறது.

சேதம்

அதுமட்டுமல்ல, மாநாடுகள், பொதுக்கூட்டங்களை முன்னிட்டு கொடிக்கம்பங்களை வைப்பதற்காக, எந்திரங்கள் மூலம் கண் மூடித்தனமாக குழிகளை தோண்டுகின்றனர். அப்போது பூமிக்கு அடியில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் பதித்துள்ள தொலைபேசி கேபிள்களில் சேதம் ஏற்பட்டு, பல வீடுகளில் தொலைபேசி பல நாட்கள் இயங்காமல் போய் விடுகிறது. தொலைபேசி நிறுவனங்களுக்கும் தேவையில்லாத செலவுகள் ஏற்படுகின்றன.

எனவே, பொது இடங்களில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

சட்டப்படி தடை

இந்த மனுவை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் விசாரித்தனர். பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பிற அமைப்புகள் சார்பில் முன் அனுமதி இல்லாமல், உரிய உரிமம் இல்லாமல், கொடிக்கம்பங்கள் வைப்பதற்கு சட்டப்படி தடை உள்ளது. இந்த சட்டத்தின்படி, கொடிக்கம்பங்கள், அலங்கார வளைவுகள் சட்டவிரோதமாக வைக்கப்படுவதை தடுக்க வேண்டிய உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் ஏனோ, கண்ணை மூடிக்கொண்டு, கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். இதற்கான காரணம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத்தான் தெரியும்.

உறுதி செய்ய வேண்டும்

ஒருவேளை இவ்வாறு சட்டவிரோதமாக வைக்கப்படும் கொடிக்கம்பங்கள், அலங்கார வளைவுகள் உள்ளிட்டவைகள் சரிந்து விழுந்து, சாலையில் செல்லும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், அதற்கான இழப்பீட்டை உள்ளாட்சி அமைப்புகள் தான் வழங்கவேண்டும். விதிகளை மீறி கொடிக்கம்பங்களை வைத்தவர்கள் மீது பொறுப்பை சுமத்த முடியாது.

எனவே, தமிழகம் முழுவதும் சாலையோரங்களிலும், நடைபாதைகளிலும், சாலைகளை மறித்தும் கொடிக்கம்பங்கள், அலங்கார வளைவுகள், விளம்பர பலகைகள் உள்ளிட்டவை இல்லை என்பதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்யவேண்டும். சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்றி, அதுதொடர்பான அறிக்கையை வருகிற ஜனவரி மாதம் 9-ந் தேதி, தாக்கல் செய்யவேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Next Story