அடுத்த 3 நாட்களுக்கு புதுவை- தமிழகத்தில் மழை இருக்காது- சென்னை வானிலை மையம்


அடுத்த 3 நாட்களுக்கு புதுவை-  தமிழகத்தில் மழை இருக்காது- சென்னை வானிலை மையம்
x

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை இருக்காது என சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.

சென்னை:

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று உருவானது. அந்த காற்றழுத்த தாழ்வு நிலை வங்கக்கடலின் தென்கிழக்கு பகுதியில் நேற்று மாலை நிலைகொண்டு இருந்தது.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தினர் தொடர்ந்து கண்காணித்து தகவலை வெளியிட்டு வருகிறார்கள். இன்று காலை வெளியிட்ட தகவல்படி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.

சற்று வலு அதிகரித்து இருப்பதால் அந்த தாழ்வு மண்டலம் தற்போது வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர தொடங்கி இருக்கிறது. இன்னும் 48 மணி நேரத்தில் அது அந்தமானை கடந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மறுநாள் அது புயல் சின்னமாக மாறும் என்று கணித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக புயல் சின்னம் தமிழக கடலோரத்தை நெருங்கி வர வாய்ப்பு உள்ளது.

12-ந்தேதிதான் புயல் சின்னத்தின் நகர்வை பொறுத்து அது கடலோரத்தில் எங்கு கரையை கடக்கும் என்பது தெரியவரும். தற்போதைய கணிப்பின்படி வட தமிழ்நாட்டில் அந்த புயல் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையத்தினர் கருதுகிறார்கள்.

இந்திய பெருங்கடலில் உருவாகும் புயலுக்கு ஆசிய நாடுகள் பெயர் சூட்டி வருகின்றன. அதன்படி இந்த புயலுக்கு “பெய்ட்டி” என்று பெயர் சூட்டப்படும். இந்த பெயரை தாய்லாந்து நாடு வழங்கி உள்ளது.

சமீபத்தில்தான் கஜா புயல் டெல்டா மாவட்டங்களை உருக்குலைத்து விட்டு சென்றுள்ளது. இந்த நிலையில் பெய்ட்டியும் வந்து வட தமிழ்நாட்டில் பெயர்த்து எடுத்து விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள வங்கட கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தெற்கு மத்திய வங்க கடல் பகுதியில் கடல் கொந்தளிப்பாக காணப்படும்.  எனவே, மீனவர்கள் மூன்று நாட்களுக்கு கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை இல்லை. சென்னையை பொறுத்த வரை வறண்ட வானிலையே காணப்படும்.என கூறினார்.

Next Story