ஸ்டெர்லைட் ஆலை இயங்காமல் இருக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் -சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் தகவல்


ஸ்டெர்லைட் ஆலை இயங்காமல் இருக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் -சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் தகவல்
x
தினத்தந்தி 15 Dec 2018 9:12 AM GMT (Updated: 15 Dec 2018 9:12 AM GMT)

ஸ்டெர்லைட் ஆலை இயங்காமல் இருக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தூத்துக்குடியில் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கடந்த மே 22-ந்தேதி வன்முறையாக வெடித்தது. இதனை தொடர்ந்து போலீசார் வன்முறையை கட்டுப்படுத்த நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் பொதுமக்களில் 13 பேர் பலியாகினர்.

தொடர்ந்து பதற்றம் நீடித்த நிலையில், மக்களின் கோரிக்கையை ஏற்று ஆலையை மூட அரசாணை வெளியானது. இந்நிலையில், தூத்துக்குடியில் அமைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மூடியது இயற்கை நீதிக்கு எதிரானது என்றும் ஆலையை திறக்கலாம் என்றும் மேகாலயா மாநிலத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான உண்மை கண்டறியும் குழு, தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வில் அறிக்கை அளித்தது.

இந்த நிலையில்,  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.  மேலும், ஆலைக்கு தேவையான மின்சார வசதியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு குறித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் கூறியதாவது:-

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்ததை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும். ஸ்டெர்லைட் ஆலை இயங்காமல் இருக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றார்.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் பழனிசாமி சேலம் மாவட்டம் ஓமலூரில் தெரிவித்தார்.

Next Story