தஞ்சையில் நள்ளிரவில் எம்.ஜி.ஆர். சிலை அருகே திடீரென ஜெயலலிதா சிலை திறப்பு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு


தஞ்சையில் நள்ளிரவில் எம்.ஜி.ஆர். சிலை அருகே திடீரென ஜெயலலிதா சிலை திறப்பு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 18 Dec 2018 10:45 PM GMT (Updated: 18 Dec 2018 10:22 PM GMT)

தஞ்சையில், நள்ளிரவில் எம்.ஜி.ஆர். சிலை அருகே திடீரென ஜெயலலிதா சிலை திறக்கப்பட்டது. இதனையொட்டி அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர்,

கடந்த 1995-ம் ஆண்டு முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது 8-வது உலக தமிழ் மாநாடு தஞ்சையில் நடத்தப்பட்டது. அப்போது தஞ்சை ரெயில் நிலையம் முன்பு 8 அடி உயரத்தில் எம்.ஜி.ஆர். சிலை புதிதாக நிறுவப்பட்டது. அந்த சிலையை மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

இந்த நிலையில் அந்த சிலை அருகே பீடம் கட்டும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. எம்.ஜி.ஆர். சிலையின் பீடம் மோசமான நிலையில் இருப்பதால் புதிய பீடத்தில் எம்.ஜி.ஆர். சிலை வைக்கப்பட உள்ளதாக அ.தி. மு.க.வினர் தெரிவித்தனர்.

ஜெயலலிதா சிலை நள்ளிரவில் திறப்பு

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 7 அடி உயரம் கொண்ட பீடத்தில் 7¾ அடி உயரம் கொண்ட புதிய ஜெயலலிதா சிலை வைக்கப்பட்டு விழா எதுவும் நடத்தப்படாமல் அவசர கதியில் திறக்கப்பட்டது. அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலரின் முயற்சியில் இந்த சிலை திறக்கப்பட்டது. ஆனாலும் அவர்கள், தங்களுக்கு எதுவும் தெரியாது என மறுப்பு தெரிவித்தனர்.

இந்த சிலை வைக்க மாநகராட்சியிடம் அனுமதி பெறப்பட்டதா? என மாநகராட்சி ஆணையர் காளிமுத்துவிடம் கேட்டபோது, நான் அலுவலக பணி நிமித்தமாக சென்னைக்கு வந்துள்ளேன். தஞ்சையில் ஜெயலலிதா சிலை திறந்து இருப்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நீங்கள் சொல்லித்தான் இப்போது தெரிகிறது என்றார்.

ரூ.8 லட்சம் மதிப்பு

அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்களிடம் கேட்டபோது, “ரூ.8 லட்சம் மதிப்பில் 7¾ அடி உயர ஜெயலலிதா சிலை ஆந்திர மாநிலத்தில் செய்யப்பட்டது. இது வெண்கல சிலை இல்லை. பைபர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செய்யப்பட்ட சிலையாகும். பெரிய அளவில் விழா நடத்தித்தான் சிலையை திறக்க திட்டமிட்டோம். ஆனால் இப்படி அவசரத்தில் சிலையை திறக்க வேண்டிய நிலை திடீரென ஏற்பட்டது. எம்.ஜி.ஆர். சிலை வைக்கும்போதே நெடுஞ்சாலைத்துறையினரிடம் முறையாக அனுமதி பெற்று இருக்கிறோம். அந்த இடம் அ.தி.மு.க.விற்கு உரியது. அதனால் ஜெயலலிதா சிலையை அகற்ற யாராலும் முடியாது” என்றனர்.

Next Story