ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு இறுதி தீர்ப்பு அல்ல - முதல்வர் எடப்பாடி பழனிசாமி


ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு இறுதி தீர்ப்பு அல்ல - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 8 Jan 2019 8:49 AM GMT (Updated: 8 Jan 2019 9:50 AM GMT)

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு இறுதி தீர்ப்பு அல்ல என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை,

கவர்னர்  உரை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்து பேசும்போது கூறியதாவது:-

தமிழகம் மின்மிகை மாநிலமாக மாற்றப்பட்டுள்ளது . மக்கள் நலப்பணிகளை ஜெயலலிதா வழியில் தொடர்ந்து செய்து வருகிறது. தமிழக அரசு முதியோர்களுக்கும், பெண்களுக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் ஜாதி, மத கலவரம் குறைந்து, சட்டம் - ஒழுங்கு பாதுகாக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் வெகுவாக குறைந்துள்ளது.

காவல்துறையினருக்கு ஏற்படும் உளவியல் ரீதியான பிரச்சினைகளைத் தீர்க்க பயிற்சி வழங்கப்படுகிறது.

மக்களின் பாதுகாப்பிற்காக பொது இடங்களில் கேமராக்கள் பொருத்துவதில், இந்தியாவில் தமிழகம் முன்னோடியாக விளங்குகிறது.

கோவில்களில் சிலைகளை பாதுகாக்க ரூ.308 கோடி செலவில் 3087 பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவையில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவது குறித்து விரிவான சாத்திய கூறுகளுடன் திட்ட அறிக்கை தயாராகி வருகிறது.

கடந்தாண்டைவிட கூடுதலாக 2.41 லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீட்டுக்கு பதிவு செய்துள்ளனர்.

சிறந்த மனிதவளம், மின்சாரம் மற்றும் உட்கட்டமைப்பில் மிகச்சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இதனால் தமிழகத்தில் முதலீடு செய்ய பல தொழில் நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு இப்போதே 27 நிறுவனங்களுக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டதன் மூலம் ரூ.44,000 கோடி முதலீட்டை தமிழகம் பெறும். நாட்டிலேயே அதிக முதலீடுகளை ஈர்க்கும் மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.

பல நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய இருப்பதால், 50,000 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும்.

சென்னை மெட்ரோ ரயில் 2வது கட்ட பணிகளுக்கு ஜப்பான் நிறுவனம் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

ஜப்பான் நிறுவனத்தின் கடன் உதவியுடன் சென்னை மெட்ரோ ரயில் 2வது கட்ட பணிகள் விரைவில் தொடங்கும்.

சிறு, குறு, நடுத்தர தொழில்கள் புதிதாக தொடங்க ஒற்றைச்சாளர முறையில் அனுமதி வழங்கப்படுகிறது.

அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.

சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான சூழல், கலாச்சாரம், கோவில்கள் பாதுகாப்பு ஆகியவையே அதிக நபர்கள் வருகைக்கு காரணம்.

2016-17 ஆண்டில் மட்டும், காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து ரூ.3,526 கோடி பெறப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம் கடந்த 7 ஆண்டுகளில் 5 முறை உணவு தானிய உற்பத்தியில் சாதனை படைத்துள்ளது.

பிளாஸ்டிக் தடை அறிவிப்பிற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தர துவங்கி விட்டனர்.  பிளாஸ்டிக் தடை குறித்து தொடர்ந்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தடை உத்தரவை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும்.

கட்டிட தொழிலாளர்களுக்கு அம்மா இலவச உணவகம் அமைக்கப்படும். திரைப்பட துறையினருக்கு விரைவில் விருதுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஓய்வூதிய திட்டம் மற்றும் சம்பள முரண்பாடுகள் குறித்து தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவு எடுக்கும்.

சட்டப்பேரவையில் வெளியிட்ட 251 அறிவிப்புகளில் 221 அறிவிப்புகளுக்கு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. 30 அறிவிப்புகளுக்கு விரைவில் அரசாணை வெளியிடப்படும். 

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு இறுதி தீர்ப்பு அல்ல. தீர்ப்பின் முழு விவரம் கிடைக்கவில்லை. கிடைத்தவுடன் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என கூறியுள்ளார்.

Next Story