ரேஷன் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த எடுத்த நடவடிக்கை என்ன? அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு


ரேஷன் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த எடுத்த நடவடிக்கை என்ன? அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 12 Jan 2019 10:15 PM GMT (Updated: 12 Jan 2019 8:52 PM GMT)

அனைத்து ரேஷன் கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது தொடர்பான பரிந்துரையின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து பதில் அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை அபிராமபுரத்தில் இயங்கிவரும் ரேஷன் கடையில் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் 2010-ம் ஆண்டு திடீர் சோதனை நடத்தி ரேஷன் பொருட்கள் கள்ளத்தனமாக விற்கப்படுவதை கண்டுபிடித்தார். இதுதொடர்பாக கீதா என்ற ஊழியரை பணியிடை நீக்கம் செய்தனர்.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கீதா தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.கிருஷ்ணகுமார், ரேஷன் கடைகளில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தினால் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

அதிக நிதி

அதற்கு கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் 32,909 ரேஷன் கடைகளுக்கும் கண்காணிப்பு கேமரா பொருத்த அதிக நிதி தேவைப்படும். இதுபற்றி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருடன் ஆலோசனை நடத்தி அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குனர் எம்.சுதாதேவி ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

ரூ.97 கோடி செலவாகும்

தமிழகத்தில் நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் 1,455 ரேஷன் கடைகள் நடத்தப்படுகின்றன. இந்த கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அரசிடமிருந்து நிர்வாகம் மற்றும் நிதி ஒப்புதல்கள் பெறப்பட்டவுடன், ரூ.20 கோடியே 79 லட்சத்து 92 ஆயிரத்து 250 செலவில் கேமராக்கள் பொருத்தப்படும்.

இதுதவிர கூட்டுறவு சங்கங்கள், மகளிர் சுயஉதவி குழுக்கள், மீனவர் சங்கங்கள் நடத்தும் ரேஷன் கடைகள், நடமாடும் ரேஷன் கடைகள் என மொத்தம் 35,232 ரேஷன் கடைகள் உள்ளன. அனைத்து கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த ரூ.97 கோடி செலவாகும். இதுதொடர்பாகவும் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

என்ன நடவடிக்கை?

அறிக்கையை படித்துப் பார்த்த நீதிபதி டி.கிருஷ்ணகுமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் செய்துள்ள பரிந்துரை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வருகிற 28-ந் தேதி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

Next Story