சேலத்தில் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் : எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்


சேலத்தில் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் : எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 17 Jan 2019 12:06 AM GMT (Updated: 17 Jan 2019 12:06 AM GMT)

மறைந்த முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர். - ஜெயலலிதாவுக்கு சேலத்தில் மணி மண்டபம் மற்றும் அவர்களது திருவுருவ சிலைகளை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

சேலம்,

சேலம் மாநகராட்சி சார்பில் சேலத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் மற்றும் திருவுருவ சிலைகள் அமைக்கப்பட்டு இருந்தது.

இதனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து பேசியதாவது:-

எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா என்ற இரு பெரும் தலைவர்களும் உருவான காரணத்தினாலே தான், இந்த நாடு செழித்து, வளம் பெற்று, ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட கிராமத்தில் இருந்து நகரம் வரை இன்றைக்கு பொருளாதாரமானாலும் சரி, கல்வியானாலும் சரி, மருத்துவமானாலும் சரி, அத்தனையிலும், இந்தியாவிலேயே தமிழகம் முதன்மையாக விளங்குவதற்கு அந்த இருபெரும் தலைவர்கள் உழைத்து, தன்னையே நாட்டுக்கு அர்ப்பணித்தவர்கள்.

இருபெரும் தலைவர்களுடைய முழு உருவ வெண்கலச்சிலை திறப்பதை இறைவன் கொடுத்த பாக்கியமாக நான் கருதுகிறேன். நாம் இறைவனை கண்ணிலே பார்த்தது கிடையாது. இறைவன் தோற்றத்திலே, எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் நாம் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். நாம் இறைவனிடத்திலே என்னென்ன வேண்டுகிறோமோ, அத்தனையையும் அவர்கள் வாரி, வாரி நமக்கு வழங்கியிருக்கிறார்கள்.

ஆகவே தான், அவர்களை தெய்வத்திற்கு சமமாக நாம் போற்றிக் கொண்டிருக்கின்றோம். எத்தனையோ தலைவர்கள் தோன்றுவார்கள், வாழ்வார்கள், மறைவார்கள். ஆனால், இடைப்பட்ட காலத்திலே நாட்டு மக்களுக்கு என்ன செய்தார்கள் என்பது அவர் வாழ்ந்த காலத்திலே தான் சரித்திரம் சொல்லும். அந்த சரித்திரத்தை இருபெரும் தலைவர்கள் வாழ்ந்த காலத்திலே படைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள்.

அவர்களுடைய திட்டங்கள் அனைத்தும் உயிரோட்டமுள்ள திட்டங்கள். எத்தனை ஆண்டுகாலம் இருந்தாலும் இந்த பூமியிலே அவர்கள் அறிவித்த அத்தனை திட்டங்களும் அவர்களுடைய பெயரை உச்சரித்துக்கொண்டே இருக்கும். இந்த அரசு இன்றைக்கு புகழ் பெற்றவர்களுக்கு பல்வேறு திட்டங்களை நாம் நிறை வேற்றியிருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

சிவாஜிகணேசனுக்கு சென்னையிலே மணிமண்டபம், திருவுருவச்சிலை. கரூரில் முன்னாள் அமைச்சர், இந்த நாட்டு மக்களுக்காக உழைத்தவர், ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு வாழ்ந்த ராமசாமி படையாச்சியாருக்கு சுமார் 2.1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அறிவிக்கப்பட்டு, அவருடைய பிறந்தநாளை அரசு விழாவாக எடுக்கப்படும் என்று உறுதியளித்தோம். அதுமட்டுமல்ல, அவர் வாழ்ந்த காலத்திலே, நாட்டுமக்களுக்கு செய்த எண்ணற்ற சேவையை பெருமை சேர்க்கின்ற விதத்திலே, அவருக்கு சட்டமன்றத்திலே முழு உருவப்படம் திறக்கப்படும் என்று அறிவித்திருக்கிறோம், அதுவும் திறக்கப்படும்.

நெல்லை மாவட்டம் விளாத்திகுளத்தில் இசை மேதை நல்லப்பசாமிக்கு ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நினைவுச்சின்னம். தர்மபுரி, பாப்பாரப்பட்டியில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் பாரத மாதா நினைவாலய பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்டத்தில், புலித்தேவனுக்கு அரசின் சார்பிலே விழா. இப்படி, நாட்டுக்காக உழைத்தவர்கள், மக்களுக்காக உழைத்து, மறைந்த மாபெரும் தலைவர்களுக்கு புகழ் சேர்க்கின்ற விதத்திலே, இந்த அரசால் இவையெல்லாம் அறிவிக்கப்பட்டு பெருமை சேர்த்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட விழைகிறேன்.

நாளையதினம் (இன்று) எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா. அந்த விழாவிலே முதல் விழா சேலம் மாநகரம் மட்டுமல்ல, சேலம் மாவட்டமே அவருக்கு விழா எடுக்கின்ற காரணத்தினாலே, எம்.ஜி.ஆர். சிலை திறக்கப்பட்டு, அன்றைய தினம் காலை 9 மணியளவிலே பிறந்த நாள் விழா நடைபெற உள்ளது. ஓமலூர் மெயின்ரோட்டிற்கு ‘பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் சாலை’ என்று பெயர் சூட்டப்படும் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

எவ்வளவு தடைகள் வந்தாலும், எவ்வளவு இன்னல்கள் வந்தாலும், எவ்வளவு இழிச்சொல்லுக்கும், பழிச்சொல்லுக்கும் ஆளானாலும், அத்தனையையும் தகர்த்தெறிந்து, உங்கள் துணையோடு, இருபெரும் தலைவர்களுடைய ஆசியோடு, இந்த அரசு தொடர்ந்து பாடுபட்டு மக்களுக்கு சேவை செய்யும்.

பன்னீர்செல்வம் எம்.பி., தனது நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பிரமாண்டமான இந்த ஓமலூர் சாலை பெயர் மாற்றப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டவுடன் இந்த சாலை பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் சாலை என்று பெயர் சூட்டப்படும். அந்த சாலையிலே மிகச்சிறப்பாக, நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பிரமாண்டமான மின் கோபுரத்தை அமைத்துள்ளார், அதையும் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக திறக்கிறேன். மின்கோபுரத்தை அமைத்துக்கொடுத்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு பாராட்டுகளை உங்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சரோஜா, ஆர்.பி. உதயகுமார், எம்.பி.க்கள் பன்னீர்செல்வம், காமராஜ், செம்மலை எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினத்தந்திக்கு பாராட்டு

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பேச்சின் இடையே, தினத்தந்தி குறித்தும், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் குறித்தும் குறிப்பிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இன்றைக்கு நாடு போற்றப்படுகின்ற, பட்டி தொட்டி அத்தனை பகுதி மக்களும் பத்திரிகை என்று சொன்னால், அது தினத்தந்தி பத்திரிகை தான் அத்தனை மக்களுக்கும் நினைவிற்கு வரும். அப்படி புகழ்பெற்ற அந்த பத்திரிகையின் சொந்தக்காரர் ஆன சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் ரூ.1.34 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் மற்றும் திருவுருவச்சிலை நிறுவி கொண்டு இருக்கிறோம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டார். 

Next Story