ஜாக்டோ-ஜியோ நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு


ஜாக்டோ-ஜியோ நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 20 Jan 2019 9:25 PM GMT (Updated: 20 Jan 2019 9:25 PM GMT)

கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ-ஜியோ உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

திருச்சி,

கடந்த 1.4.2003-க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்திட வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை, ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டபோது, மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதில் ஐகோர்ட்டு நீதிபதிகள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். அதன் பின்னரும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், ஜனவரி 22-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து திருச்சியில் ஜாக்டோ-ஜியோ உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில் ஜாக்டோ- ஜியோ உயர்மட்ட குழு கூட்டம் திருச்சியில் ஜங்ஷன் அருகே ஒரு வளாகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். இதில் ஒருங்கிணைப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், ஆறுமுகம் உள்பட உயர்மட்ட குழு உறுப்பினர் கள் கலந்து கொண்டனர்.

வேலைநிறுத்த கோரிக்கைகளை வலியுறுத்தி 21-ந்தேதி (இன்று) தீவிர பிரசாரம் மேற்கொள்ளுதல், நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்குதல், நாளை காலை 10 மணிக்கு தாலுகா அளவில் ஆர்ப்பாட்டம் நடத்துதல், வருகிற 23, 24-ந் தேதிகளில் தாலுகா அளவில் மறியல் நடத்துதல், வருகிற 25-ந்தேதி மாவட்ட அளவில் மறியல் போராட்டம் நடத்துதல் என கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் வருகிற 26-ந்தேதி ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்ட குழு மீண்டும் கூடி அடுத்த கட்ட முடிவு அறிவிக்கப்படும் எனவும், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்டமாக மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்தனர்.

Next Story