பா.ம.க.வின் 17-வது நிழல் பட்ஜெட் : டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார்


பா.ம.க.வின் 17-வது நிழல் பட்ஜெட் : டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார்
x
தினத்தந்தி 6 Feb 2019 11:35 PM GMT (Updated: 6 Feb 2019 11:35 PM GMT)

பா.ம.க.வின் 17-வது நிழல் பட்ஜெட்டை டாக்டர் ராமதாஸ் சென்னையில் நேற்று வெளியிட்டார்.

சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ம.க. அலுவலகத்தில் கட்சியின் சார்பில் 17-வது நிழல் பட்ஜெட்டை வெளியிட்டார். அப்போது கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, இளைஞர் அணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி உள்பட பலர் உடன் இருந்தனர்.

பின்னர் டாக்டர் ராமதாஸ் நிழல் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்ட விவரங்களை நிருபர்களிடம் கூறியதாவது:-

2019-20-ம் ஆண்டுக்கான இந்த நிழல் பட்ஜெட் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழித்தல், வறுமை ஒழிப்பு, விவசாயம் மற்றும் கல்வி சம்பந்தமான திட்டங்களை முன்வைத்து 102 தலைப்புகளில் 72 பக்கங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் தமிழகத்தின் வருவாய் 4 லட்சத்து 21 ஆயிரத்து 26 கோடி ரூபாயாக இருக்கும். இது கடந்த ஆண்டின் மொத்த வருவாயை விட 1 லட்சத்து 90 ஆயிரத்து 509 கோடி ரூபாய் அதிகமாக இருக்கும். 69 ஆயிரத்து 823 கோடி ரூபாய் உபரியாக இருக்கும்.

தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.1 சதவீதம் என்ற உச்சத்தை தொட்டு உள்ளது. 8-ம் வகுப்பு தகுதிக்கான துப்புரவு பணிக்கு என்ஜினீயரிங் பட்டதாரிகள் விண்ணப்பிக்கும் அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது. எனவே, வேலைவாய்ப்பை அதிகரிக்க மனிதவள மேம்பாட்டு வல்லுநர்கள், பொருளாதார வல்லுநர்கள் அடங்கிய சிறப்பு பணிக்குழு அமைக்கப்படும்.

வேலையில்லா இளைஞர்களில் 10-ம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கு ஆயிரம் ரூபாயும், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாயும், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு 3 ஆயிரம் ரூபாயும், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு 4 ஆயிரம் ரூபாயும், பட்டமேற்படிப்பு முடித்தவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாயும் மாதம்தோறும் வழங்கப்படும். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள 35 லட்சம் குடும்பங்களுக்கு மாதம் தலா 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும். இதற்கு ஆண்டுக்கு 10 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவாகும்.

விவசாயிகளுக்கு பருவத்துக்கு 5 ஆயிரம் ரூபாய் வீதம், 2 பருவங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். மே மாத இறுதியில் உள்ளாட்சி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். ஜூலை மாத இறுதியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ‘வளரும் தமிழகத்துக்கு வலிமையான கட்டமைப்பு - 2025’ என்ற தொலைநோக்கு திட்டம் செயல்படுத்தப்படும். சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் கைவிடப்படும்.

ஏப்ரல் மாதம் முதல் பிறக்கும் பெண்குழந்தைகளுக்கு 18-வது வயதில் 5 லட்சம் ரூபாய் கிடைக்கும் வகையில் அவர்கள் பெயரில் வங்கியில் 90 ஆயிரம் ரூபாய் வைப்பீடு செய்யப்படும். வேளாண்மை துறையில் 30 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.

அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத்திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டங்களை தமிழக அரசு வருகிற பட்ஜெட்டில் நிறைவேற்றும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து கேட்டபோது மதசார்பற்ற ஜனதாதளம் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளதாக கிண்டலாக டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய டாக்டர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் கூட்டணி குறித்து தர்மபுரியில் ஏற்கனவே தெளிவாக கூறிவிட்டேன். அதனால், கூட்டணி குறித்த உங்கள்(பத்திரிகையாளர்கள்) கேள்விகளுக்கு எந்த பதிலும் கிடைக்காது. பட்ஜெட்டில் ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள் விளக்குகிறோம் என்றார்.

மேலும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறும்போது, “2016-ம் ஆண்டு எங்கள் தேர்தல் அறிக்கையில் கூறிய விவசாயிகளுக்கு ஊதியம் திட்டத்தை தான் மத்திய அரசு இப்போது நிறைவேற்றி உள்ளது. மத்திய அரசு வழங்கும் ஊதியம் மாதம் 500 ரூபாய் போதாது. அவர்கள் ஆண்டுக்கு ஹெட்டேருக்குத்தான் 6 ஆயிரம் ரூபாய் வழங்குகிறார்கள். நாங்கள் ஏக்கருக்கு ஒரு பருவத்துக்கு 5 ஆயிரம் ரூபாய் வீதம் 2 பருவத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்குவோம். இதன் மூலம் 5 ஏக்கர் நிலம் வைத்துள்ளவர்களுக்கு ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அரசு வருவாயை பெருக்க தமிழகத்தில் உள்ள 33 மாவட்டங்களில் ஆயிரம் கிராமங்களை தேர்வுசெய்யவேண்டும். கிராமத்திற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர் ஒருவர் தலைமையில் குழு அமைக்க வேண்டும். குழுவில் இடம்பெறும் இளைஞர்கள் தலா 1000 ரூபாயும், அரசின் பங்காக 5 கோடி ரூபாயும் வழங்கி அந்தந்த பகுதியில் விளையும் வேளாண் பொருட்களை மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்யவேண்டும்” என்றார். 

Next Story