நாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சித்து பேசிய தம்பிதுரையின் கருத்து தவறல்ல- அமைச்சர் ஜெயக்குமார்


நாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சித்து பேசிய தம்பிதுரையின் கருத்து தவறல்ல- அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 12 Feb 2019 7:43 AM GMT (Updated: 12 Feb 2019 7:43 AM GMT)

நாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சித்து பேசிய தம்பிதுரையின் கருத்து தவறல்ல என சட்டசபையில் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை

மக்களவையில் தம்பிதுரை எம்.பி. நேற்று பேசும் போது,   மத்திய அரசை கடுமையாக தாக்கி பேசினார். ஜிஎஸ்டி, மத்திய பட்ஜெட் மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து கடுமையாக விமர்சித்தார். 

இடைக்கால பட்ஜெட் மத்திய, மாநில அரசுகளை பாதிக்கும் வகையில் உள்ளது. தேர்தலை மனதில் வைத்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தேர்தல் அறிக்கை போன்று உள்ளது. மாநில அரசின் உரிமைகளை பறிப்பதில் காங்கிரஸ் அரசுக்கும், பாஜக அரசுக்கும் எந்த வித்தியாசமுமில்லை என கூறினார். 

தம்பிதுரை எம்.பி.யின் பேச்சுக்கு பாரதீய ஜனதா எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினர்.

இந்த நிலையில் இன்று தமிழக சட்டசபையில்  பாராளுமன்றத்தில் தம்பிதுரை எம்.பி. பேசியது தனிப்பட்ட கருத்தா? அரசின் கருத்தா? என பொன்முடி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், "நாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சித்து பேசிய தம்பிதுரையின் கருத்து தவறல்ல.  எந்த திட்டமாக இருந்தாலும் மாநிலங்கள் பாதிக்கப்படும் போது, அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது மாநில அரசின் கடமை, இதுவே ஜெயலலிதாவின் கொள்கை . மத்திய அரசு நிதியை தாமதமாக வழங்குவது குறித்து தம்பிதுரை பேசியுள்ளார், அதில் என்ன தவறு இருக்கிறது?"  என கூறினார்.

Next Story