அற்புதம் அம்மாளின் நீதிகேட்கும் போராட்டத்தை ஆதரியுங்கள்: 7 தமிழர்கள் விடுதலையில் கவர்னர் மவுனம் காப்பதா? டாக்டர் ராமதாஸ் கண்டனம்


அற்புதம் அம்மாளின் நீதிகேட்கும் போராட்டத்தை ஆதரியுங்கள்: 7 தமிழர்கள் விடுதலையில் கவர்னர் மவுனம் காப்பதா? டாக்டர் ராமதாஸ் கண்டனம்
x
தினத்தந்தி 12 Feb 2019 9:30 PM GMT (Updated: 12 Feb 2019 8:45 PM GMT)

அற்புதம் அம்மாளின் நீதிகேட்கும் போராட்டத்தை அனைவரும் ஆதரியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், 7 தமிழர்கள் விடுதலையில் கவர்னர் மவுனம் காப்பதா? என்று தனது கண்டனத்தையும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆட்சியாளர்களையும், அதிகார வர்க்கத்தினரையும், கவர்னரையும் சந்தித்து கோரிக்கை மனுக்களைக் கொடுத்து கொடுத்து சலித்துப் போன அற்புதம் அம்மாள், பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த ஜனவரி 24-ந் தேதி கோவையில் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் நீதிகேட்கும் நெடும்பயணத்தைத் தொடங்கி உள்ளார்.

கோவை, ஈரோடு, விருதுநகர், ராஜபாளையம், மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்பட 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தமது பயணத்தை அவர் நிறைவு செய்திருக்கிறார். செல்லும் இடங்களில் எல்லாம் 7 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற முழக்கங்கள் அதிகரித்து வரும் நிலையில், அந்த உணர்வுகளின் ஓசை இன்னும் கவர்னர் மாளிகையை மட்டும் எட்டவில்லையோ? என்று தான் எண்ணத் தோன்றுகிறது. இந்த விஷயத்தில் கவர்னர் மவுனம் காப்பது கண்டிக்கத்தக்கது.

7 தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி ஒருபுறம் அற்புதம் அம்மாள் நீதிகேட்கும் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், மற்றொரு புறம் முருகனும், நளினியும் சிறையில் காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். கவர்னரின் மனதை கோரிக்கைகள் அசைக்காத நிலையில், இந்த போராட்டங்களாவது அசைத்துப் பார்க்க வேண்டும்.

அதற்காக அற்புதம் அம்மாளின் நீதிகேட்கும் பயணப் போராட்டம் வெற்றி பெற வேண்டும். அதற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை மதித்து, பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்து உடனடியாக கவர்னர் ஆணையிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story