மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 முனைப்போட்டிக்கு வாய்ப்புகூட்டணி அமைக்க அ.தி.மு.க., தி.மு.க. மும்முரம்தொகுதிகள் பிரிப்பதில் இழுபறி + "||" + 4 chance for Tamil Nadu Set up the coalition AIADMK, DMK Busy

தமிழகத்தில் 4 முனைப்போட்டிக்கு வாய்ப்புகூட்டணி அமைக்க அ.தி.மு.க., தி.மு.க. மும்முரம்தொகுதிகள் பிரிப்பதில் இழுபறி

தமிழகத்தில் 4 முனைப்போட்டிக்கு வாய்ப்புகூட்டணி அமைக்க அ.தி.மு.க., தி.மு.க. மும்முரம்தொகுதிகள் பிரிப்பதில் இழுபறி
நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி அமைப்பதில் அ.தி.மு.க., தி.மு.க. தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
சென்னை, 

மத்தியில் ஆண்டு கொண்டிருக்கும் பா.ஜ.க. அரசின் ஆட்சி காலம் மே மாதத்துடன் நிறைவடைகிறது.

புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாத இறுதியில் நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட இருக்கிறது.

தேர்தல் தேதியை அடுத்த மாதம் (மார்ச்) தொடக்கத்தில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, நாடாளுமன்ற தேர்தலை வலுவாக எதிர்கொள்ளும் வகையில், பிரதான அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் பணியில் மறைமுகமாக ஈடுபட்டுள்ளன. நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை கூட்டணி வியூகத்தை தேசிய கட்சிகள் தான் வகுக்கும். ஆனால், தமிழகத்தில் தேசிய கட்சிகள் வலுவிழந்து இருப்பதால், மாநில கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க.வே கூட்டணி பேச்சுவார்த்தையை முன்னெடுத்து நடத்தி வருகின்றன.

தமிழகத்தில், அ.தி.மு.க. - பா.ஜ.க. தலைமையில் ஒரு அணியும், தி.மு.க. - காங்கிரஸ் தலைமையில் மற்றொரு அணியும் உருவாகி வருகிறது. இதேபோல், டி.டி.வி.தினகரன் தனி அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனியாக தேர்தலை சந்திப்பதாக தெரிவித்துள்ளார். இதை வைத்து பார்க்கும்போது, நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 4 முனைப்போட்டி நிலவும் என்று தெரிகிறது.

ஆளும் கட்சியான அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி ஆகியவையும், தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவையும் இடம்பெறும் என தெரிகிறது.

தற்போது, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அ.தி.மு.க., தி.மு.க. தலைமையிலான அணிகளில் திரைமறைவாக நடைபெற்று வருகின்றன. ஆனால், தொகுதி பங்கீட்டிலேயே இழுபறி நிலை இருப்பதால், யார் யாருக்கு எந்த தொகுதி என்பதை அடையாளம் காண முடியாத நிலை இருக்கிறது.

தமிழகத்தில் கூட்டணிகளுக்கு தலைமை தாங்கும் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் குறைந்தது 25 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன. தேசிய கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளும் தங்களது கூட்டணிகளில் இரட்டை இலக்க தொகுதிகளை கேட்டுப்பெறுவதில் உத்வேகம் காட்டுகின்றன. ஆனாலும், 2 கட்சிகளுக்குமே அவை வகிக்கும் கூட்டணிகளில் அதிகபட்சமாக தலா 8 தொகுதிகளே ஒதுக்கப்பட இருக்கின்றன.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை, ஒதுக்கப்படும் தொகுதிகளை கேட்டுப்பெறுவதில் கோஷ்டி தலைவர்கள் இப்போதே தயாராக இருக்கின்றனர். முன்னாள் காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் திருச்சி தொகுதியை குறிவைத்துள்ளார். பா.ஜ.க.விலும் இதே நிலை தான் நீடிக்கிறது. இந்த கட்சியில் உள்ள தலைவர்களே ஒதுக்கப்படும் தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளனர். மத்திய அரசின் புதிய திட்டங்களும், அறிவிப்புகளும் தங்களுக்கு கைகொடுக்கும் என்றும் அவர்கள் நம்பிக்கொண்டிருக்கின்றனர்.

தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள ம.தி.மு.க. திருச்சி, ஈரோடு, விருதுநகர், தென்காசி ஆகிய 4 தொகுதிகளை கேட்கிறது. ஏனென்றால், தேர்தல் ஆணைய சட்டப்படி, மாநிலத்தில் மொத்தம் உள்ள தொகுதிகளில் 10 சதவீத இடங்களில் போட்டியிட்டால் மட்டுமே குறிப்பிட்ட கட்சிக்கு ஏற்கனவே போட்டியிட்ட சின்னம் கிடைக்கும். அந்த வகையில், 4 தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் கிடைக்கும். ஆனால், தி.மு.க. தரப்பில் இன்னும் உறுதியான பதில் அளிக்கப்படவில்லை. இதனால், ம.தி.மு.க. தரப்பு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ திருச்சி தொகுதியில் போட்டியிடுவார் என தெரிகிறது. இதே தொகுதியை காங்கிரஸ் கட்சியும் கேட்பதால் ஆரம்பத்திலேயே குழப்பமான நிலை நிலவுகிறது.

இதே கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆகியவை தலா 2 தொகுதிகளை எதிர்பார்த்தா லும், தலா ஒரு தொகுதி வழங்கப்பட்டாலும் அதை ஏற்றுக்கொள்ளும் என்று தெரிகிறது. இந்த கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தொகுதிகளை கேட்கிறது. ஏனென் றால், 2009, 2014-ம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்த கட்சி 2 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. எனவே, இந்த முறையும் அதே எண்ணிக்கையை கேட்கிறது. ஆனால், தி.மு.க. தரப்பில் ஒரு தொகுதி தருவதாக சொல்லப்படுகிறது. இருந்தாலும், குறிப்பிட்ட 2 தொகுதிகளிலும் தாங்கள் பூத் கமிட்டிகளை அமைத்து தேர்தல் வேலை களை தொடங்கிவிட்டதாக வும், அதனால் 2 தொகுதிகளை தர வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி வருகிறது.

தி.மு.க. கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சி ராமநாதபுரம், வேலூர் ஆகிய 2 தொகுதிகளில் ஒன்றை கேட்கிறது. இதேபோல், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும் ஒரு தொகுதி வழங்கப்பட இருக்கிறது. முதலில், பா.ம.க.வுடனும் தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், கூட்டணியில் பா.ம.க. இருந்தால் நாங்கள் இடம்பெற மாட்டோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடக்கத்திலேயே கூட்டணியில் புயலை கிளப்பியது. இதுபோன்ற சூழ்நிலையால், தி.மு.க. கூட்டணி இன்னும் இறுதி வடிவம் பெறவில்லை.

இதே நிலைமைதான் அ.தி.மு.க. கூட்டணியிலும் நிலவுகிறது. அந்த கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட இருக்கிறது. மேலும், பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதில், பா.ம.க.வுக்கு 4, தே.மு.தி.க.வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. ஆனால், 2 கட்சிகளும் இதற்கு சம்மதிக்காமல் மேலும் எண்ணிக்கையை உயர்த்தி கேட்டு வருகின்றன. அதனால், பேச்சுவார்த்தையில் இன்னும் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்த கூட்டணியில் உள்ள புதிய தமிழகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதில், இரட்டை இலை சின்னத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியில் போட்டியிடுவார் என தெரிகிறது. அதேபோல், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி திருப்பூர் தொகுதியை கேட்டு வருகிறது. ஆனால், இன்னும் அது இறுதி செய்யப்படவில்லை.

எனவே, தமிழகத்தில் பிரதான கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுமே இன்னும் தங்களது நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியை இறுதி செய்யவில்லை. தமிழக சட்டசபை கூட்டம் இன்றுடன் முடிவடையும் நிலையில், நாளை (வெள்ளிக்கிழமை) முதல் கூட்டணி பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்த 2 கட்சிகளும் திட்டமிட்டுள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே கூட்டணியை அறிவிக்கவும் முடிவு செய்துள்ளன.