இறுதி துணை நிதிநிலை அறிக்கை : ரூ.17,714 கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்


இறுதி துணை நிதிநிலை அறிக்கை : ரூ.17,714 கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
x
தினத்தந்தி 14 Feb 2019 10:35 AM GMT (Updated: 14 Feb 2019 11:03 AM GMT)

இறுதி துணை நிதிநிலை அறிக்கைக்காக 17 ஆயிரத்து 714 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பதாக துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

2018-2019-ம் ஆண்டிற்கான இறுதி துணை பட்ஜெட்டை சட்டசபையில் நேற்று தாக்கல் செய்து நிதியமைச்சரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பேரவையில் முன் தாக்கல் செய்யப்பட்டுள்ள துணை பட்ஜெட்டில் மொத்தம் 17,714.99 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு வழி வகை செய்தது. இவற்றில் 11,523.74 கோடி ரூபாய் வருவாய் கணக்கிலும், 6,191.25 கோடி ரூபாய் மூலதனம் மற்றும் கடன் கணக்கிலும் அடங்கும். 

2018-2019-ம் ஆண்டிற்கான முதல் துணை பட்ஜெட் இந்த ஆண்டு ஜனவரி 8-ந்தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்காக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், குடும்பம் ஒன்றிற்கு ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்குவதற்காக 2,019.11 கோடி ரூபாயை இந்த அரசு அனுமதித்துள்ளது. 

கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மற்றும் தமிழ்நாடு பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் நிலுவை கடன்களை பங்கு மூலதன உதவியாக மாற்றுவதற்கு ரூ.1,562.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊதிய திருத்தத்தின்படி, ஓய்வூதியம் வழங்குவதற்காக 1,345.60 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கியால் பரிந்துரைக்கப்பட்ட நெறிமுறைகளின்படி, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் ஒரு முறை பங்கு மூலதனமாக 1,200 கோடி ரூபாயை அனுமதித்துள்ளது.

வறட்சி மற்றும் கஜா புயலினால், வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள, வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களுக்கு, சிறப்பு நிதியுதவியாக குடும்பம் ஒன்றிற்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்காக, இந்த அரசு 1,200 கோடி ரூபாய் அனுமதித்துள்ளது. இதற்காக துணை பட்ஜெட்டில் 700 கோடி ரூபாய் மற்றும் 500 கோடி ரூபாய் முறையே மானியகோரிக்கை எண் 42-ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை-மானிய கோரிக்கை எண் 34-நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை என்பதன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. 

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு, தொகுக்கப்பட்ட ஓய்வூதியம் மற்றும் விடுப்பு கால ஊதியம் போன்ற ஒருமுறை வழங்கப்படும் ஓய்வூதிய பலன்களுக்காக அரசு 1,968.74 கோடி ரூபாய் அனுமதித்துள்ளது. மாநில போக்குவரத்து கழகங்களுக்கு டீசல் விலை இழப்பீட்டிற்காக அரசு 333.07 கோடி ரூபாய் அனுமதித்துள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story