நல்ல முடிவு எடுக்க வேண்டுமென விஜயகாந்த்திடம் வலியுறுத்தினேன் - சந்திப்புக்கு பின் திருநாவுக்கரசர் பேட்டி


நல்ல முடிவு எடுக்க வேண்டுமென விஜயகாந்த்திடம் வலியுறுத்தினேன் - சந்திப்புக்கு பின் திருநாவுக்கரசர் பேட்டி
x
தினத்தந்தி 21 Feb 2019 7:21 AM GMT (Updated: 21 Feb 2019 7:21 AM GMT)

நல்ல முடிவு எடுக்க வேண்டுமென விஜயகாந்த்திடம் வலியுறுத்தினேன் என விஜயகாந்த்தை சந்தித்த பின் திருநாவுக்கரசர் பேட்டி அளித்தார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கூட்டணி அமைப்பதிலும், தொகுதி பங்கீடுகளை முடிப்பதிலும் அ.தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து களம் கண்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. இந்த முறை மெகா கூட்டணியுடன், தேர்தலை சந்திக்க இருக்கிறது. அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்த பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

அ.தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள இந்த கூட்டணியில் தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகளை இணைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை வந்த பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளரும், மத்திய மந்திரியுமான பியூஸ்கோயல், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை சாலிக்கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது அ.தி.மு.க. கூட்டணிக்கு வரும்படி அவர் அழைப்பு விடுத்தார்.

விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த், துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோருடன் பியூஸ் கோயல் பேசினார். எல்.கே.சுதீஷிடம், பியூஸ்கோயல் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தியபோது, இரட்டை இலக்க தொகுதிகளை கேட்டு எல்கே.சுதீஷ் வலியுறுத்தியுள்ளார். இதனால் அந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை.

இந்தநிலையில், தே.மு.தி.க. துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையில் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று காலை அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் இருந்து கொண்டே எல்.கே.சுதீஷ், தொகுதி பங்கீடு தொடர்பாக மத்திய மந்திரி பியூஸ்கோயல், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் செல்போனில் பேசியுள்ளார். அப்போதும், தே.மு.தி.க.வுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில்  இன்று காலை தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை குழு அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த்தை சந்தித்து  கூட்டணி தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முக்கிய ஆலோசனை நடத்தியது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தே.மு.தி.க. சுதீஷ், பார்த்தசாரதி, அழகாபுரம் மோகன்ராஜ் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு பங்கேற்றனர்.

விஜயகாந்த் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு  உள்ளது என கூறப்படுகிறது.

இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலன் குறித்து விசாரிக்க அவரது இல்லத்திற்கு சென்றார் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் .  அங்கு விஜயகாந்த்தை  சந்தித்து அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். 

பின்னர்  திருநாவுக்கரசர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

"விஜயகாந்த்  எனது 30 ஆண்டு கால நண்பர்.  விஜய்காந்த் உடல் நலம் குறித்து கேட்டறிந்தேன்.  விஜயகாந்த் ஒரு கட்சியின் தலைவர், நானும் ஒரு அரசியல்வாதி. இருவரின் சந்திப்பின் போது அரசியல் பேசவில்லை என கூறுவது பொய் ஆகி விடும். நாட்டு நடப்பு மற்றும் அரசியல் ரீதியாகவும் பேசிக்கொண்டோம். நல்ல முடிவு எடுக்க வேண்டுமென்ற அபிப்ராயத்தை விஜயகாந்த்திடம் கூறினேன்" என கூறினார்.

Next Story