மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலில் தி.மு.க., காங்கிரஸ் தொகுதி பங்கீட்டை திறம்பட பேசி முடித்தவர் கனிமொழி


மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலில் தி.மு.க., காங்கிரஸ் தொகுதி பங்கீட்டை திறம்பட பேசி முடித்தவர் கனிமொழி
x
தினத்தந்தி 21 Feb 2019 11:00 PM GMT (Updated: 21 Feb 2019 7:41 PM GMT)

மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலில், தி.மு.க.-காங்கிரஸ் தொகுதி பங்கீட்டை கனிமொழி திறம்பட பேசி பேசி முடித்துள்ளார்.

சென்னை, 

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் பெரிய மாநிலங்களில், தமிழ்நாட்டுக்கு முக்கிய இடம் உண்டு. காரணம், புதுச்சேரியையும் சேர்த்து கணக்கில் கொள்கிறபோது, 40 தொகுதிகள் இருப்பதுதான். தமிழ்நாட்டில் எப்போதும் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தலைமையில்தான் கூட்டணிகள் அமையும்.

தி.மு.க.வை பொறுத்தவரையில், 1971, 1980, 2004, 2009 என 4 முறை காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது. இப்போது 5-வது முறையாக இந்த கூட்டணி அமைந்துள்ளது. ஆரம்ப காலத்தில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி அமைப்பதில் முரசொலிமாறனின் பங்களிப்பை தி.மு.க. தலைவராக இருந்த கருணாநிதி பயன்படுத்தினார்.

முரசொலி மாறன் 2003-ம் ஆண்டு மறைந்த பின்னர் தேசிய அரசியலில் தி.மு.க.வின் பிரதிநிதியாக கனிமொழியை கருணாநிதி கொண்டு வந்தார். 2007-ம் ஆண்டு அவரை மாநிலங்களவை எம்.பி. ஆக்கினார். அதைத் தொடர்ந்து அவர் மாநிலங்களவையில் சிறப்பாக பேசி, தலைவர்களுடன் இணக்கமான நட்புறவை ஏற்படுத்தி அரசியலில் மேன்மை பெறத்தொடங்கினார்.

2009-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தபோது கனிமொழி அதில் பங்கேற்றார். மூத்த தலைவர்களுடன் அமர்ந்து தொகுதி பங்கீடு அனுபவத்தை பெற்றார்.

இந்த நிலையில் தற்போது நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தி.மு.க.வும், காங்கிரசும் கரம் கோர்த்துள்ளன. 2004, 2009-ம் ஆண்டுகளில் முரசொலி மாறன் இல்லாத நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் சற்றே இழுபறி ஏற்பட்டது.

ஆனால் தற்போது அந்த நிலை இல்லை. இந்த முறை எந்தவொரு சிக்கலும், இல்லாமல் காங்கிரஸ் கட்சியுடனான பேச்சுவார்த்தையும், தொகுதி பங்கீடும் சுமுகமாக முடிந்துள்ளது என்றால் அதற்கு கனிமொழிதான் காரணம்.

வியப்பில் ஆழ்த்தினார்

காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்தி தொகுதி பங்கீடு செய்வதற்கான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் உரிமையை கனிமொழிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கி இருந்தார். அவர் வகுத்து கொடுத்த செயல் திட்டத்தின்படி, களத்தில் குதித்த கனிமொழி தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை திறம்பட பயன்படுத்தினார்.

மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை, கனிமொழி 2 தடவை சந்தித்து பேசினார். தமிழக அரசியல் கள நிலவரத்தையும், தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒவ்வொன்றும் எத்தனை இடங்களில் போட்டியிட்டால் சிறப்பாக இருக்கும் என்பதை தகுந்த புள்ளி விவரங்களுடனும் ராகுல் காந்தியிடம் கனிமொழி எடுத்துக்கூறினார். மேலும், எந்த தொகுதியில் எந்த கட்சி போட்டியிடுவது நல்ல பலனைத்தரும் என்பதையும் விளக்கினார்.

கனிமொழியின் நேர்த்தியான பேச்சும், ஆங்கில மொழி வளமும் ராகுல் காந்தியையும், காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

அதைத் தொடர்ந்துதான் தி.மு.க. கூட்டணியில் புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகளை பெற்று காங்கிரஸ் போட்டியிட ராகுல் காந்தி சம்மதம் தெரிவித்தார்.

இந்த அளவுக்கு எல்லாவற்றையும் நிறைவாக முடித்த கனிமொழி, தொகுதி பங்கீடு முடிவை சென்னையில் மு.க.ஸ்டாலின் தான் அறிவிப்பார் என்று குறிப்பிட்டு பக்குவமுடன் நடந்துகொண்டார்.

இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முகுல் வாஸ்னிக், கே.சி.வேணுகோபால் இருவரும் சென்னை வந்து தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். தொகுதி பங்கீட்டை முறைப்படி தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இதில் கனிமொழியின் பங்களிப்பு, காங்கிரஸ் மற்றும் தி.மு.க என இரு தரப்பிலும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் இருந்து கனிமொழி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் அவர் முதன்முதலாக மக்களவையில் அடியெடுத்து வைக்கிற வாய்ப்பு கிடைக்கிற பட்சத்தில், டெல்லி அரசியலில் அவர் மேலும் சாதிக்க முடியும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக அமைந்துள்ளது.


Next Story