நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அ.தி.மு.க- பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும்- அமித்ஷா பேச்சு


நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  அ.தி.மு.க- பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும்- அமித்ஷா பேச்சு
x
தினத்தந்தி 22 Feb 2019 10:44 AM GMT (Updated: 22 Feb 2019 11:24 AM GMT)

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெறும் என ராமநாதபுரத்தில் பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா கூறியதாவது,

தமிழகத்திலிருந்து 35க்கும் மேற்பட்ட எம்பிக்கள், மோடியை மீண்டும் பிரதமராக்கும் யுத்தத்தில் இருப்பார்கள் என நம்புகிறேன். மோடி ஆட்சியில் தீவிரவாதத்தை எள் முனை அளவில் கூட அனுமதிக்க மாட்டோம். தீவிரவாதிகளுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும். தீவிரவாத செயலை பாஜக அரசு சகித்துக்கொள்ளாது.

தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்கள் சுப்பிரமணியன், சிவசந்திரன் இன்னுயிரை இழந்திருக்கிறார்கள், புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த 40 வீரர்கள் குடும்பத்திற்கு கோடிக்கணக்கான பாஜக தொண்டர்கள்  சார்பில் அஞ்சலி செலுத்துகிறேன்.

பல்வேறு சிறந்த தலைவர்களை இந்தியாவிற்கு கொடுத்த பூமி தமிழகம், நாடாளுமன்ற தேர்தல் யுத்தத்திற்காக இங்கே நாம் ஒன்றுபட்டிருக்கிறோம்., தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளிலும் வலிமையாக பாஜக கூட்டணி போட்டியிடுகின்றன, வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும். 

திமுக-காங்கிரஸ் கூட்டணி பிரதமர் வேட்பாளரை அறிவிக்க முடியுமா, ரூ.12 லட்சம் கோடிக்கு ஊழல் செய்த திமுக-காங்கிரஸ் கூட்டணி தமிழகத்திற்கு நல்லது செய்ய முடியுமா என கேள்வி எழுப்பிய அவர், திமுக - காங். கூட்டணியின் பொருள் ஊழல், அதிமுக - பாஜக கூட்டணியின் பொருள் முன்னேற்றம் என்று கூறினார்.

Next Story