அ.தி.மு.க. பொதுக்கூட்ட மேடையில் தேமுதிக விஜயகாந்த்- தமாகா ஜி.கே.வாசன் படம் இடம் பெற்று உள்ளது
அ.தி.மு.க. பொதுக்கூட்ட மேடையில் தேமுதிக விஜயகாந்த்- தமாகா ஜி.கே.வாசன் படம் இடம் பெற்று உள்ளது. கூட்டணி உறுதியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தலைமையில் அரசியல் கட்சிகளின் கூட்டணி உடன்பாடுகள் நிறைவடையும் தருவாயை எட்டி உள்ளது. தே.மு.தி.க.வை பொறுத்தவரையில் மதில்போல் பூனை போன்று அ.தி.மு.க. பக்கமும், தி.மு.க. பக்கமும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
தி.மு.க. தலைமையிலான கூட்டணி பேச்சுவார்த்தைகள் நேற்றுடன் நிறைவு பெற்று, கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இதனால் தே.மு.தி.க.வுக்கான தி.மு.க. கூட்டணி கதவு அடைக்கப்பட்டது. அதே நேரத்தில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில், விஜயகாந்த் தலைமையில் கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினர்கள், அணி செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்தும், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடலாம் என்பது குறித்தும், தேர்தல் பணியாற்றுவது எப்படி என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. எனினும், கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு இணையான அங்கீகாரம் தங்களுக்கும் வழங்க வேண்டும் என்பதில் தே.மு.தி.க. உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது குறைந்தபட்சம் 7 தொகுதிகள் வேண்டும் என்பதில் தே.மு.தி.க. உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 4 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 1 மாநிலங்களவை தொகுதி ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று காலை கட்சி அலுவலகம் வந்தார். அங்கு கூட்டணி தொடர்பாக தேமுதிக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். முன்னதாக தேமுதிக தலைமை அலுவலகத்தில் தொகுதி பங்கீட்டு குழுவுடன், துணை செயலாளர் சுதீஷ் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகளை மட்டுமே அதிமுக ஒதுக்கியதாக தகவல் வெளியானது. இதில் 2 தனித் தொகுதிகள் என்றும் தகவல் வெளியானது.
தனித்தொகுதிகளை ஏற்க தேமுதிக தயங்குவதே இழுபறிக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக பாமக வலுவாக உள்ள தொகுதிகளை தேமுதிக தவிர்ப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட தகவலுக்கு தேமுதிக நிர்வாகிகள் அதிருப்தி என தகவல் தெரிவித்தனர். வேண்டாம், வேண்டாம் கூட்டணி வேண்டாம் என கோயம்பேடு தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கருத்து தெரிவித்தனர். அப்போது, அதிமுக கொடுக்கும் 4 தொகுதிகளை பெறுவதை விட தனித்தே நிற்கலாம் என சில நிர்வாகிகள் யோசனை கூறியதாகத் தெரிகிறது.
நீலகிரி , தூத்துக்குடி, நாகை மற்றும் டெல்டா தொகுதிகளில் ஒன்று என அ.தி.மு.க. சார்பில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இல்லை என தே.மு.தி.க கருதுகிறது.
இதனால் தனித்து களம் கண்டால் என்ன? என்ற மனநிலையில் கோயம்பேடு அலுவலகத்தில் தேமுதிக நிர்வாகிகள் விவாதிப்பதாக தகவல் வெளியானது.
தினகரன் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால் என்ன தவறு எனவும் தேமுதிக நிர்வாகிகள் மத்தியில் விவாதம் நடைபெற்றதாக தகவல் வெளியானது.
சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் அதிமுக - பாஜக கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பிரதமர் மோடி இதில் கலந்து கொண்டு பரப்புரையை தொடங்குகிறார். இந்த பொதுக்கூட்டத்துக்காக அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரங்களில், பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களின் படங்களும் இடம் பெற்றுள்ளன. ஆனால் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் படம் இடம்பெறவில்லை.
இந்த நிலையில் இன்று நடைபெறும் பிரச்சார பொதுகூட்ட மேடையில் தேமுதிக விஜயகாந்த் படமும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் படமும் இடம்பெற்று உள்ளது. இதனால் அ.தி.மு.க- தே.மு..தி.க கூட்டணி உறுதியானதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story