வண்டலூர் அருகே விழா: ரூ.10,481 கோடி மதிப்பிலான அரசு திட்டப்பணிகள் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்


வண்டலூர் அருகே விழா: ரூ.10,481 கோடி மதிப்பிலான அரசு திட்டப்பணிகள் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 6 March 2019 11:30 PM GMT (Updated: 6 March 2019 6:59 PM GMT)

சென்னை வண்டலூர் அருகே நடந்த விழாவில் ரூ.10 ஆயிரத்து 481 கோடி மதிப்பிலான அரசு திட்டப்பணிகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார்.

சென்னை, 

சென்னை வண்டலூர் அருகே நடந்த விழாவில் ரூ.10 ஆயிரத்து 481 கோடி மதிப்பிலான அரசு திட்டப்பணிகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார்.

ரூ.10 ஆயிரத்து 481 கோடி மதிப்பில் திட்டங்கள்

சென்னை வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் மத்திய அரசின் பல்வேறு துறைகள் சார்பில் நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ள ரூ.10 ஆயிரத்து 481 கோடியே 64 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகள் தொடக்க விழா மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் நேற்று நடந்தது.

கிளாம்பாக்கத்தில் அமைக் கப்பட்டிருந்த பிரத்தியேக அரங்கில் இந்த விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை 4.10 மணிக்கு விழா மேடைக்கு வந்தார். அவரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வணக்கம் தெரிவித்து வரவேற்றார். பின்னர் விழா தொடங்கியது.

அதற்குப்பிறகு எண்ணூர் திரவ எரிவாயு முனையம், 7 நெடுஞ்சாலை திட்டங்கள், மின்மயமாக்கப்பட்ட ரெயில் பாதை திட்டம் ஆகிய திட்டங்கள் குறித்தும், அதன் பயன்பாடுகள் குறித்தும் வீடியோ திரையிடப்பட்டது. அந்த காட்சியை பிரதமர் நரேந்திர மோடி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பார்த்தனர்.

இதன்பின்பு இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் ரூ.5,150 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள எண்ணூர் திரவ எரிவாயு முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த எரிவாயு முனையத்தின் மூலம் 1,244 கிலோ மீட்டர் தூரத்துக்கு எண்ணூரில் இருந்து மணலி, திருவள்ளூர், புதுச்சேரி, நாகப்பட்டினம், மதுரை, திருச்சி, தூத்துக்குடி, ராமநாதபுரம் பகுதிகளுக்கு ஒரு குழாய் மூலமும், ஓசூர் வழியாக பெங்களூருவுக்கு ஒரு குழாய் மூலமும் எரிவாயு எடுத்துச் செல்லப்பட இருக்கிறது.

மின்மயமாக்கப்பட்ட ரெயில் பாதை

இதேபோன்று தெற்கு ரெயில்வே சார்பில் ரூ.321.64 கோடி செலவில் ஈரோடு, கரூர், திருச்சி இடையே 142 கிலோ மீட்டர் தூரத்துக்கும், சேலம், கரூர், திண்டுக்கல் இடையே 158 கிலோ மீட்டர் தூரத்துக்கும் அமைக்கப்பட்டுள்ள மின்மயமாக்கப்பட்ட ரெயில் பாதைகளையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் நிறைவேற்றப்பட்டுள்ள 2 வழிச்சாலை மற்றும் அவினாசி-திருப்பூர்-அவினாசிபாளையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 4 வழிச்சாலை திட்டங்களை தொடங்கிவைத்தார்.

6 வழிச்சாலைக்கு அடிக்கல்

இதுதவிர விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் விக்கிரவாண்டி முதல் சேத்தியாதோப்பு வரையிலும், கடலூர், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் சேத்தியாதோப்பு முதல் சோழபுரம் வரையிலும், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் சோழபுரம் முதல் தஞ்சாவூர் வரையிலும் 4 வழிச்சாலைக்கும், காஞ்சீபுரம், வேலூர் மாவட்டங்களில் காரைப்பேட்டை முதல் வாலாஜாபாத் வரையில் 6 வழிச்சாலைக்கும், வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம்-வேலூர் புறவழிச்சாலை வரை 2 வழிச்சாலைக்கும் அடிக்கல் நாட்டினார். இந்த திட்டங்களுக்கான மொத்த மதிப்பீடு ரூ.5,010 கோடி ஆகும். இந்த திட்டங்கள் அனைத்திற்குமான கல்வெட்டுகள் அனைத்தையும் காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி மேடையில் இருந்தவாறு ரிமோட் மூலம் திறந்துவைத்தார்.

சென்னை அடையாறு எம்.ஜி.ஆர்.-ஜானகி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். சிலையையும் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார். அப்போது அந்த சிலை திறக்கப்பட்ட காட்சியும் அகன்ற திரையில் காண்பிக்கப்பட்டது. விழா மாலை 4.20 மணிக்கு நிறைவு பெற்றது. விழாவில் கல்லூரி மாணவிகள், பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அமைச்சர்கள் தவிர யாரும் அனுமதிக்கப்படவில்லை.

விழாவில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொன்னாடை அணிவித்து காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் சிலை ஒன்றை நினைவு பரிசாக வழங்கினார். அப்போது பிரதமர் அந்த சிலையை பற்றி எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டறிந்தார்.

இந்த நிகழ்ச்சியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், மரகதம் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story