“மோடியை மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்க உழைப்போம்” முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு


“மோடியை மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்க உழைப்போம்” முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 6 March 2019 11:45 PM GMT (Updated: 6 March 2019 7:04 PM GMT)

நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்க உழைப்போம் என்று சென்னையில் நடந்த பிரசார கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சென்னை, 

நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்க உழைப்போம் என்று சென்னையில் நடந்த பிரசார கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

பா.ஜ.க.வை ஆதரிப்பது ஏன்?

வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

நாடே வியக்கும் அளவுக்கு மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. நாம் இங்கு பத்திரமாக, நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்று சொன்னால் நாட்டை ஆளுகின்ற வலிமை மிக்க பிரதமர் இருப்பதனால் தான்.

நாட்டை வழிநடத்தக்கூடிய தகுதி நரேந்திர மோடிக்குத் தான் இருக்கிறது. நாடு முழுவதும் எங்கு தேடி பார்த்தாலும் நரேந்திர மோடியை போன்று ஒரு தலைவரை பார்க்க முடியாது.

அதனால்தான் அ.தி.மு.க., பா.ம.க., புதிய தமிழகம் மற்றும் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து பா.ஜ.க.வை ஆதரிக்கின்றோம். அண்டை நாட்டில் இருக்கிறவர்கள் எல்லாம் நமது நாட்டுக்கு எவ்வளவோ பிரச்சினைகளை உருவாக்குகிறார்கள். அதையெல்லாம் தாக்குப்பிடித்து முறியடிக்க வேண்டுமானால், நரேந்திர மோடியால் தான் முடியும். இதனை மக்களே தீர்மானித்துவிட்டார்கள்.

பயங்கரவாதிகள் முகாம் மீது நமது விமானப்படை துல்லியமாக தாக்குதல் நடத்தி, அவர்களை கூண்டோடு அழித்தது. அதற்கு வழி வகுத்தவர் நரேந்திர மோடி.

அபிநந்தனை மீட்டவர்

கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு நாடுகளுக்கு சென்று நமது நாட்டின் பெருமைகளை வெளிப்படுத்தினார். இதன் விளைவாக நமது நாட்டு ராணுவ வீரர்களுக்கு அத்தனை நாடுகளும் குரல் கொடுத்தது. நமது விமானி அபிநந்தன் தற்செயலாக எதிரிகளிடம் சிக்கிக்கொண்டபோது, எந்தவித சேதாரமும் இல்லாமல் குறுகிய காலத்தில் மீட்கப்பட்ட வரலாற்றை நிகழ்த்தியவர் நரேந்திர மோடி.

அண்டை நாடுகளில் உள்ள சிப்பாய்களிடம் சிக்கிக்கொண்ட பிறகு யாரும் பத்திரமாக வந்தது கிடையாது. அதனை முறியடித்து சாதனை படைத்தவர் நரேந்திர மோடி. கடந்த 5 ஆண்டுகளில் விலைவாசி உயராமல் பார்த்துக்கொண்டார்.

மெட்ரோ ரெயில்

சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிகளுக்கு நரேந்திர மோடி விரைவாக அனுமதி கொடுத்து, பணிகளை தொடங்க உதவவேண்டும். கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றித்தரவேண்டும். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழக மக்களின் நெஞ்சங்களிலே எப்போதும் நிலைத்து நிற்கக்கூடிய நிலையில் நீங்கள் இருப்பீர்கள்.

நாடு முழுவதும் இருக்கிற சிறு, குறு விவசாயிகள் பயன் பெறும் வகையில் வங்கி கணக்கில் ரூ.2 ஆயிரம் செலுத்தப்படும் என்ற உன்னதமான அறிவிப்பை கொடுத்தவர் நரேந்திர மோடி. அந்த திட்டத்தில் தமிழகத்தில் 25 லட்சம் விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அதில் 15 லட்சம் பேருக்கு வங்கி கணக்கில் பணம் வந்து சேர்ந்துவிட்டது என்பதை பெருமையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அத்தனை பேரும் தேனீக்கள் போல சுறு, சுறுப்பாக செயல்பட்டு அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அனைவரையும் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்து, நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்க உழைப்போம்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

ஓ.பன்னீர்செல்வம்

பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

இந்த எழுச்சிமிகு கூட்டத்தைப் பார்த்து எதிர்க்கட்சிகளுக்கு, அடிவயிறு கலங்கியிருக்கும் துரோகிகளுக்கோ, நடுக்கம் கண்டிருக்கும். சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்திருக்கும் சுயநலவாதிகளுக்கோ, சப்த நாடியும் ஒடுங்கிப் போய் இருக்கும்.

நம்மையெல்லாம் தவிக்கவிட்டு ஜெயலலிதா மறைந்தபோது, பிரதமர் நரேந்திர மோடி நமக்கு ஆறுதலாக இருந்தார்.

இந்தியாவுக்கு நன்மைகள் கிடைக்க...

தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் நன்மைகள் கிடைக்க வேண்டும் என்றால் நரேந்திர மோடி தான், பாரத பிரதமராக வேண்டும். அதற்காகத்தான், நாம் வெற்றிக் கூட்டணி அமைத்திருக்கிறோம். ஜெயலலிதா நம்மாடு இருந்திருந்தால் என்ன முடிவெடுத்திருப்பாரோ, அந்த முடிவைத்தான் அவருடைய விசுவாசத் தொண்டர்களாகிய நாங்கள் எடுத்திருக்கிறோம்.

இருவரின் நட்பையும் நேரிலே பார்த்தவர்கள் நாங்கள். அந்த நட்பின் அடிப்படையில்தான், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருக்கிறோம்.

எதிர்க்கட்சிகளைப் பார்த்துக் கேட்கிறேன். உங்கள் கூட்டணியில் யார் பிரதமர்? என்று உங்களால் சொல்ல முடியுமா? உங்கள் கூட்டணியிலேயே பிரதமர் ஆவதற்கு யாருக்குமே தகுதியும் இல்லை. யார் பிரதமர்? என்று சொல்வதற்கு உங்களுக்கு தைரியமும் இல்லை.

ஒற்றுமையோடு உழைப்போம்

எங்களை எளிதாக வென்றுவிடலாம் என்று எண்ணியவர்களின் முகமெல்லாம், இப்பொழுது எட்டிக்காயை தின்றது போல எட்டு கோணலாகி விட்டது. ஓய்வில்லாமல் உழைப்போம், ஒற்றுமையோடு உழைப்போம். 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறுவோம்.

இந்திய மண்ணின் இறையாண்மை காக்க நரேந்திர மோடியை வலிமை மிக்க பாரதப் பிரதமராக மீண்டும் அமர வைப்போம்.

இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.

Next Story