பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினர்


பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினர்
x
தினத்தந்தி 6 March 2019 9:45 PM GMT (Updated: 2019-03-07T01:49:50+05:30)

பிளஸ்-1 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 21 ஆயிரத்து 650 மாணவ-மாணவிகள் எழுதினர்.

சென்னை, 

பிளஸ்-1 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 21 ஆயிரத்து 650 மாணவ-மாணவிகள் எழுதினர்.

பிளஸ்-1 பொதுத்தேர்வு

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு தான் முதலில் பொதுத்தேர்வு இருந்தது. கடந்த ஆண்டு முதல் பிளஸ்-1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை திட்டமிட்டது. அதன்படி 2-வது ஆண்டாக பிளஸ்-1 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைபெறுகிறது.

நேற்று தொடங்கிய பிளஸ்-1 பொதுத்தேர்வு வருகிற 22-ந் தேதி வரை நடக்க இருக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 7 ஆயிரத்து 278 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 16 ஆயிரத்து 618 மாணவ-மாணவிகளும், 5 ஆயிரத்து 32 தனித்தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 650 பேர் இந்த தேர்வை எழுதினர்.

2,914 தேர்வு மையங்கள்

சென்னை மாநகரில் மட்டும் 410 பள்ளிகளில் இருந்து 156 தேர்வு மையங்களில் 47 ஆயிரத்து 305 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். தமிழகம் முழுவதும் பிளஸ்-1 பொதுத்தேர்வுக்காக 2 ஆயிரத்து 914 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இது கடந்த ஆண்டை காட்டிலும் 150 தேர்வு மையங்கள் அதிகம் ஆகும்.

நேற்று தமிழ் பாடத்தேர்வு நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு பிற்பகல் 12.45 மணி வரை நடந்தது. பிளஸ்-1 பொதுத்தேர்வினை வேலூர், கடலூர், புதுக்கோட்டை, கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளில் உள்ள கைதிகள் 78 பேர் புழல் சிறையில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில் எழுதினார்கள்.

பறக்கும் படையினர் ஆய்வு

தேர்வில் மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடாமல் இருப்பதை தடுப்பதற்காக தேர்வுத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து உள்ளது.

அதன்படி, தேர்வு அறைகளில் கண்காணிப்பு பணிக்காக 45 ஆயிரத்து 300 ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டனர். அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக 4 ஆயிரம் எண்ணிக்கையிலான பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க அவ்வப்போது தேர்வு அறைகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

சற்று எளிமையாக இருந்தது

நேற்று நடைபெற்ற தமிழ் பாடத்தேர்வு சற்று எளிமையாக இருந்ததாக மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்தனர். இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், ‘பிளஸ்-1 பாடத்திட்டம் புதிதாக மாற்றப்பட்ட பிறகு நடைபெறும் முதல் பொதுத்தேர்வு இது. மாணவ-மாணவிகள் இந்த பாடத்திட்டத்தை புரிந்துகொள்வதற்கு சிரமப்பட்டனர். பாடத்திட்டம் மாற்றப்பட்ட பிறகு நடக்கும் முதல் பொதுத்தேர்வில் வினாக்களை கொஞ்சம் எளிமையாக கேட்டு இருக்கலாம்’ என்றனர். 8-ந் தேதி (நாளை) ஆங்கிலம் பாடத்தேர்வு நடைபெற இருக்கிறது.

Next Story