பொள்ளாச்சியில் பெண்களுக்கு பாலியல் தொல்லை : குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் வலியுறுத்தல்


பொள்ளாச்சியில் பெண்களுக்கு பாலியல் தொல்லை : குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க  ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 March 2019 7:53 AM GMT (Updated: 11 March 2019 10:50 AM GMT)

பொள்ளாச்சியில் பல்வேறு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

பொள்ளாச்சி ஜோதி நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த நாகேஸ்வரன் என்பவரது மகன் சபரிராஜன் (வயது 25). இவர் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியை காதலித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி சபரிராஜன், அந்த மாணவியை ஊஞ்சவேலாம்பட்டிக்கு வருமாறு அழைத்தார். அங்கு ஒரு காரில் சபரிராஜன், தனது நண்பர்களான திருநாவுக்கரசு (27), சதீஷ் (29), வசந்தகுமார் (24) ஆகியோருடன் இருந்தார். அந்த மாணவி வந்ததும், தாராபுரம் ரோட்டில் அவரை காரில் அழைத்து சென்றனர். கார் சிறிது தூரம் சென்ற போது சபரிராஜன் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதை செல்போனில் படம் பிடித்து 4 பேரும் மிரட்டி வந்தனர். இதற்கிடையில் அந்த மாணவியின் கழுத்தில் கிடந்த ஒரு பவுன் நகையை பறித்து விட்டு காரில் இருந்து அந்த மாணவியை இறக்கி விட்டு சென்றனர்.

இந்த நிலையில் தொடர்ந்து ஆபாச படத்தை காட்டி மிரட்டி வந்ததால் மாணவி பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து அந்த மாணவி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் பாலியல் தொல்லை, வழிப்பறி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த திருநாவுக்கரசை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்திற்கு மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

பொள்ளாச்சியில் மாணவிகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொள்ளாச்சியில் பாலியல் கொடுமையில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளை காப்பாற்ற ஆளும்கட்சி போராடுகிறது. மிக மோசமான கலாச்சாரத்திற்கு அதிமுக துணைபோவது கண்டனத்திற்குரியது. 

தவறு செய்தவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். சிக்கியவர்களை தப்பவிட ஆளும்தரப்பு பகீரத முயற்சி எடுத்து வருவது கண்டனத்திற்குரியது.

மாணவிகளின் எதிர்கால நலன் பாதுகாக்கப்படும் வகையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். 

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story